இனப்பிரச்சினைக்கு தீர்வு என்பது காலம் காலமாக ஏமாற்றப்படும் ஒரு செயற்படாகவே காணப்படுகிறது. தமிழர்களின் உரிமைகளை அழித்து சிங்கள குடியேற்றத்தை ஸ்தாபிக்கும் பணிகளை அரச அதிகாரிகள் துரிதமாக முன்னெடுத்து வருகிறார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்,
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றும் வகையில் அமைய வேண்டும். இனப்பிரச்சினைக்கு தீர்வு என்பது தொடர்ந்து ஏமாற்றத்திற்கு உட்படுத்தப்படும் ஒரு செயற்பாடாக காணப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியம் பல நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் முன்வைக்க வேண்டும் என்ற வலியுறுத்தலை நாணய சபையிடம் முன்வைக்கிறேன். அப்போது தான் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் சூழல் தோற்றம் பெறும்.
ஊழல் ஒழிப்பு தொடர்பில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என நாணய நிதியம் விசேட நிபந்தனை முன்வைத்துள்ளது.ஆட்சியாளர்கள் ஊழலை முதன்மையாக நிலை நிறுத்தி செயற்பட்டதால் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது.ஊழல் மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டால் மாத்திரம் தான் நாட்டின் எதிர்காலம் சிறந்ததாக அமையும்.
கொக்குத்தொடுவாயில் தமிழரின் பூர்வீக நிலங்களில் நிலவை அளவை திணைக்களம் எல்லை தூண்களை நாட்டியுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தில் நில அபகரிப்பு திட்டமிட்ட வகையில் படையினரால் முன்னெடுக்கப்படுகிறது.காணி அபகரிப்பை தவிர்க்குமாறு ஜனாதிபதி பணிப்புரை பிறப்பித்தும்,அதனை கூட பொருட்படுத்தாமல் அரச அதிகாரிகள் எமது உறவுகளின் நிலத்தை அபகரித்து,சிங்கள குடியேற்றங்களை உருவாக்குகிறார்கள்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முகாம்களில் தமிர்கள் படுகொலைகள் செய்யப்பட்டுள்ளார்கள்.இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றம் எடுத்த தீர்மானம் என்ன என்பதை இந்த உயரிய சபை ஊடாக கேட்டுக் கொள்கிறேன்.தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு தீர்வு காணப்படவில்லை.
27-10-2000 ஆம் ஆண்டு தமிழ் பத்திரிகையொன்றில் புனர்வாழ்வு முகாம் படுகொலை தொடர்பில் 200 கிராமவாசிகள் பொலிஸாரால் கைது என்று செய்தி வெளியாகியிருந்தது. அந்த முகாமில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான விசாரணைகள் நடைபெற்றதாக காட்டிக்கொண்டாலும் அந்த விசாரணை மற்றும் நீதிமன்ற வழக்குகள் தொடர்பில் எந்த தகவல்களும் வெளியாகவில்லை. அந்த படுகொலைகள் யாரால் செய்யப்பட்டது என்று கண்டறியப்பட்டதா? இந்த படுகொலை தொடர்பில் நீதிமன்றம் என்ன தீர்ப்பை வழங்கியது என்ற தகவல்களை வெளிக்கொணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
வடக்கு மாகாண மீனவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபடவுள்ளார்கள்.வெளிவிவகாரத்துறை அமைச்சரின் கருத்தை அடிப்படையாக கொண்டு இந்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்கி அதனூடான கிடைக்கும் வருமானத்தை இலங்கை மீனவர்களுக்கு வழங்குவதாக வெளிவிவகாரத்துறை அமைச்சர் குறிப்பிட்டார்,
இதனை அடியொற்றி போராட்டங்களில் வடக்கு மீனவர்கள் போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்.இலங்கை மீனவர்களையும்,இந்திய மீனவர்களையும் முரண்பட வைத்து இலங்கை இந்திய தமிழ் உறவில் பகைமையை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.