தாயக மக்களின் விருப்பங்கள் தற்போது நிறைவேற்றப்படவில்லை என்று சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு தெரிவிப்பு

வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் விருப்பத்துடன் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த போதும், அவர்களின் விருப்பங்கள் தற்போது நிறைவேற்றப்படவில்லை என்று சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு தெரிவித்துள்ளது.

சர்வதேச நெருக்கடிகள் சபையின் இலங்கைக்கான ஆலோசகர் எலன் கீனன் (Alan Keenan) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு செப்டெம்பரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டு ஆட்சிக்கு வந்த போது பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தது.

இந்த வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தன. ஆனால், தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்த நிலையில், மக்களிடையே தற்போது ஏமாற்றம் அதிகரித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் மனித புதைக்குழிகள் உள்ளமை தற்போது கண்டறியப்பட்டு வருகின்றன.
எனினும், வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி இதுவரையிலும் நிலைநாட்டப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

போரின் போது இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுக்கான நீதி இதுவரையிலும் பெற்றுத்தரப்படவிவல்லை.
அத்துடன், வடக்கு கிழக்கில் உள்ள காணிகளை சிங்களவர்கள் ஆக்கிரமித்தல், இதுவரையிலும் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு தீர்க்கப்படாத பிரச்சினைகள் மக்கள் மத்தியில் நிலவுகின்றன. எனினும், இதுவரையிலும் அவர்களுக்கான பிரச்சினைகள் தீர்க்கப்படாமலேயே உள்ளதாக சர்வதேச நெருக்கடிகள் சபையின் இலங்கைக்கான ஆலோசகர் எலன் கீனன் தெரிவித்துள்ளார்.