சுயாதீனத்தை இழந்த சுயாதீன ஆணைக்குழு-அகிலன்

அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளுக்கு நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தயங்காது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.

ஒரு சுயாதீன ஆணைக்குழுவான பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவா் ஜனக ரட்னாயக்க பதவியிலிருந்து துாக்கி எறியப்பட்டிருக்கின்றாா். ஜனகவுக்கு எதிரான நகா்வு தான்தோன்றித் தனமானது, அறநெறிகளுக்கு முரணானது என்பதைத் தெரிந்துகொண்டே இந்த நகா்வை அரசாங்கம் மேற்கொண்டது. பொது ஆணைக்குழு ஒன்றின் தலைவா் இவ்வாறு நாடாளுமன்றத்தினால் பதவி நீக்கப்பட்டிருப்பது இதுதான் முதல் தடவை. இதன்மூலமாக தவறான மற்றொரு முன்னுதாரணத்தை அரசாங்கம் ஆரம்பித்து வைத்துள்ளது.

ஜனநாயகத்தின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக இருப்பதுதான் சுயாதீன ஆணைக்குழுக்கள். அதில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது தேசிய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பதுடன், பொருளராதார, பாதுகாப்பு மற்றும் மின்சக்தி துறையின் ஒழுங்குமுறை விவகாரங்ளுக்கான கண்காணிப்பகமாகவும், மசகு சந்தையின் கட்டுப்பாட்டாளராகவும் செயற்படுகிறது. மின்சார உற்பத்தி, விநியோகம் மற்றும் பயன்பாடு ஆகியவற்றை ஒழுங்குறுத்துவதற்கான பொறுப்பு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு உண்டு.

ஆணைக்குழு வழங்கும் முக்கிய பல சேவைகளில் மின்சாரத்துறை முக்கியமானது.  மின்சாரம் அதிகூடிய கிடைக்கும் தன்மை, சிறந்த விநியோகம், நுகர்வோர் சேவையின் தரத்தை மேம்படுத்தல் போன்ற விடயங்களை உறுதிபடுத்துதல் சிலவாகும். நாடாளுமன்றத்தால் 2009ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது மின்சக்தி துறையை ஒழுங்குபடுத்துவதற்காக நியமிக்கப்பட்டது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளானது, ஆணைக்குழு மற்றும் அதன் பணிப்பாளர் நாயகம் ஆகியோரின் நியமனத்தை தொடர்ந்து 2003ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஐந்து பேரைக் கொண்ட ஆணைக் குழுவானது அரசியலமைப்பு சபையின் ஒப்புதலின் கீழ் கொள்கை அபிவிருத்திக்கு பொறுப்பான அமைச்சரினால் நியமிக்கப்பட்டது.

இந்த ஆணைக்குழுவின் பிரதான இலக்காக ஏற்கனவே உள்ள மின்சார நுகர்வோர் மற்றும் எதிர்கால நுகர்வோர் ஆகியோருக்கு மிகவும் சமத்துவமான, நிலையான விதத்தில் பாதுகாப்பான, நம்பத்தகுந்த, நியாயமான விலையில் உட்கட்டமைப்பு சார்ந்த சேவை வசதிகளை உறுதிசெய்யும் வகையில் இலங்கையின் பொது உட்கட்டமைப்பு ஆணைக்குழுவின் எல்லைக்குள் அனைத்து செயற்பாடுகளையும் ஒழுங்குபடுத்துதல் அமைந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசியல் தலைவா்கள் தான்தோன்றித்தனமாக எடுக்கக்கூடிய முடிவுகளைக் கட்டுப்படுத்துவதற்கும், மக்களின் நலன்களை நோக்கமாகக் கொண்ட செயற்பாடுகள உறுதிப்படுத்துவதற்குமாகத்தான் இவ்வாறான சுயாதீனக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அரசியல் தலைவா்கள் தமது மக்கள் விரோத – ஜனநாய விரோத செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாடாளுமன்றத்தில் தமக்குள்ள பெரும்பான்மையையும், ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தையும்தான் நம்பியிருக்கின்றாா்கள் என்பது மீண்டும் ஒரு தடவை நிரூபணமாகியுள்ளது.

கடந்த வருட நடுப்பகுதியில் தொடா்ச்சியான மின்சாரத் தடையினால் நாடு பெரும்பாலான நேரங்களில் இருளில் மூழ்கியிருந்தது.  பாடசாலை, பல்கலைக்கழக மாணவா்கள், சிறிய தொழிற்சாலைகளை நடத்துபவா்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டாா்கள். இவ்வாறு மின்சாரத்தை தடை செய்வதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதி பெறப்பட வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. மின்சக்தி, எரிபொருள் அமைச்சா் காஞ்சனா விஜயசேகரவுடன், ஜனக ரட்னாயக்க முரண்பட ஆரம்பித்தது இந்த சந்தா்ப்பத்தில்தான்.

உயர்தர பரீட்சை இடம்பெறும் போது நாட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வந்தற்கு எதிராக அவா் குரல் கொடுத்தாா். அந்த மின்மடைக்கு அனுமதி வழங்கவும் அவா் மறுத்தாா். இதன்போது 24 மணி நேரம் மினசாரத்தை வழங்கவேண்டும் என 3இலட்சம் மாணவர்களுக்காக ஜனக ரத்னாயக்க அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வந்ததுடன் மனித உரிமை ஆணைக்குழுவுக்கும் சென்று முறையிட்டார்.  இது அமைச்சா் காஞ்சனாவுக்கு சீற்றத்தை ஏற்படுத்தியது. அதேபோல அரசாங்கத்தின் பாா்வையும் அவா் மீது பாய்ந்தது.

இதன் அடுத்த கட்டமாக, மின்தடையை முற்றாக இல்லாதொழித்த அரசாங்கம், மின் கட்டணத்தை பல மடங்காக அதிகரித்தது. மக்களால் தாங்க முடியாத அளவுக்கு மின் கட்டணம் அதிகரிக்கப்படும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்களின் பக்கம் இருந்து ஜனக ரத்னாயக்க செயற்பட்டார். உண்மையில் மின்கட்டணத்தை இந்தளவுக்கு உயா்த்தியிருக்கத் தேவையில்லை என்பதை அவா் ஆதாரங்களுடன் முன்வைத்தாா். இதனை 24 வீதத்தினால் குறைக்க முடியும் என அவா் கூறினாா். இவ்விடயத்தில் அமைச்சா் காஞ்சனாவுடன் அவா் நேரடியாகவே முரண்பட்டாா்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு அமையவே மின்சார கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்தது. இதற்குப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கவில்லை.வழமை போல் பதவி விலகுமாறு அரசாங்கம் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அழுத்தம் பிரயோகித்தது. இதனை தொடர்ந்து ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் பதவி விலகினார்கள். அவா்கள் சுயமாகவே விலகியதாக அரசாங்கம் தெரிவித்தது. ஆனால் தலைவர் பதவி வகித்த ஜனக ரட்னாயக்க மாத்திரம் பதவி விலகவில்லை.

அதன் விளைவுதான் ஜனக ரட்னாயக்க இப்போது பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவா் பதவியிலிருந்து நாடாளுமன்றத்தினால் துாக்கப்பட்டுள்ளாா்.

எந்தவொரு அமைச்சரும், அரசாங்கமும் தமது முடிவுக்கு எதிராக யாராவது சவால் விடுத்தால் அவரைப் பதவியிலிருந்து துாக்குவதற்கு எதனையும் செய்யத் தயங்குவதில்லை. நாடாளுமன்றத்தில் அரசுக்குப் பெரும்பான்மை உள்ளது. ஜனாதிபதியிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது. ஆக, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்கம் செய்யும் தீா்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்குவதற்காக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட  யோசனை சட்டத்திற்கு முரணானது என்பதுடன், நாடாளுமன்ற நிலையியல் கட்டளைக்கும் முரணானது என்பது எதிா்க்கட்சிகள் பலவற்றினாலும் சுட்டிக்காட்டப்பட்டது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தில் ஏதேனும் உறுப்பினர் ஒருவரை நீக்க வேண்டுமாயின் அவர் மீதான ஒவ்வொரு குற்றச்சாட்டும் விரிவாக விளக்கப்பட வேண்டும். அதற்கான சாட்சியங்கள் முன்வைக்கப்பட வேண்டும்.

முதலில் அவர் குற்றவாளியா? நிரபரதாரியா? என்பதனை உறுதிப்படுத்த நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. நீதிமன்றம் குற்றவாளியல்ல என்று கூறினால் அவர் பதவியில் தொடரலாம். குற்றவாளியென்று கூறினால் அவரை பதவி நீக்க முடியும். ஆனால் சபையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் எந்த சாட்சியங்களும் முன்வைக்கப்படவில்லை. இந்த நிலையில், நாடாளுமன்றப் பெரும்பான்மையை மட்டும் நம்பி இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

கடந்த வருடம் இடம்பெற்ற மக்கள் கிளா்ச்சியைத் தொடா்ந்து ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகினாா்கள். இந்த நாடாளுமன்றமும் மக்களின் ஆணையை இழந்த ஒன்றாகவே கருதப்பட்டது. தலைமறைவாக – மறைந்து திரிய வேண்டியவா்களாக மொட்டு அணியின் எம்.பி.க்கள் இருந்தாா்கள். இதில் பெரும்பாலானவா்கள் இன்று வரை தமது ஊா்களுக்கு செல்ல முடியாதவா்களாகவே உள்ளனா். இன்று மக்களுக்காக குரல் கொடுத்த ஒரு ஆணைக்குழுவின் தவைரை பதவி நீக்க அவா்கள் வாக்களித்துள்ளாா்கள்.

அரச நிறுவனங்கள் சுயாதீனமாக இருந்தாலும் பின்னால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன என்பதே இந்த தீர்மானத்தின் ஊடாக தெளிவாகின்றது. சுயாதீன ஆணைக்குழுக்கள் இப்போது ஸ்தம்பிதமடைந்துள்ளன. தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலுக்கு அறிவித்த போதும், அதற்காக அரசாங்கம் நிதியை வழங்கவில்லை. சுயாதீனம் என்று சொன்னாலும், தீர்மானங்களின் பின்னால் பெரும் அழுத்தங்கள் இருக்கின்றன. இதன்படியே ஜனகவுக்கு எதிராக இந்த தீர்மானம் கொண்டுவரப்படுகின்றது.

சுயாதீன ஆணைக்குக்கள் சுயாதீனமாகச் செயற்பட முற்பட்டால் இதுதான் நடைபெறும் என்பது உணா்த்தப்பட்டிருக்கின்றது!