தமிழ் நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமின் தலைவர் சிவக்குமார் என்ற இலங்கைத் தமிழர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முகாமிற்குள் புகுந்த குழுவொன்று, சிவக்குமாரை ஆயுதத்தால் தாக்கியதாகவும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேகநபர்கள் தப்பிச் சென்ற நிலையில், ஆத்திரமடைந்த சிவக்குமாரின் உறவினர்கள் மற்றும் முகாம்வாசிகள் சந்தேகநபர்களின் வீடுகளுக்குத் தீ வைத்ததால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.
இந்த மோதல் காரணமாக முகாம் பகுதியில் வன்முறை ஏற்படாமல் இருக்கவும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும் கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான காவல்துறையினர் முகாமில் குவிக்கப்பட்டுள்ளனர். முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், தப்பியோடியவர்களை கைது செய்வதற்கு விசாரணை இடம்பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



