மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும் போது அவர்களுக்காக எதிர்க்கட்சிகள் ஒருபோதும் ஒன்றிணைவதில்லை என்று அரசாங்கம் விமர்சித்துள்ளது.
உலகளவில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை மையமாகக் கொண்டு, அரசாங்கத்தை எவ்வாறு நெருக்கடிக்குள்ளாக்குவது என்பதை திட்டமிடுவதற்காகவே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். யுத்தம் எப்போது நிறைவுக்கு வரும் என்பதை எவராலும் ஸ்திரமாகக் கூற முடியாது. எனவே இப்போதிருந்தே வலுசக்தி பயன்பாடுகளை வரையறைகளுடன் முன்னெடுப்பதே சிறந்ததாகும் என்று அவர் கூறியுள்ளார்.
அதனை விடுத்து அன்றாட சேவைகளை மட்டுப்படுத்துவது பொறுத்தமான தீர்மானமாக இருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மார்ச் முதலாம் திகதியின் பின்னர் எரிபொருள் கொள்வனவு வழமையை விட மூன்று மடங்கால் அதிகரித்திருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
எனவே பொது சேவைகளில் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை.
யுத்தம் விரிவடைந்து செல்கின்றமை மற்றும் அதனால் எமது பொருளாதாரத்துக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் குறித்து அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருகிறது.
அதேபோன்று ஒவ்வொரு பிரஜைகளும் நாட்டு நலன்கருதி செயற்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும் போது அவர்களுக்காக எதிர்க்கட்சிகள் ஒருபோதும் ஒன்றிணைவதில்லை.
தித்வா புயலின் போதோ அல்லது தற்போது ஏற்பட்டுள்ள இந்த போர் நிலைமைகளால் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்காகவோ அவர்கள் இணைந்து தீர்வுகள் குறித்து சிந்திக்கவில்லை.
மாறாக உலகளவில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினையை மையமாகக் கொண்டு, அரசாங்கத்தை எவ்வாறு நெருக்கடிக்குள்ளாக்குவது என்பதை திட்டமிடுவதற்காக ஒன்றிணைந்துள்ளனர். உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் பின்னர் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை கிடைத்த ஆசனங்களை தம்வசப்படுத்துவதற்காக அவர்கள் ஒன்றிணைந்தனர்.
நாட்டை எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பதில் அவர்கள் ஒருபோதும் கவனம் செலுத்துவதில்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.



