நாட்டில் இனவாதத்தை தூண்டுவதற்கு ஒருபோதும் இடமளிப்பதில்லை என தெரிவிக்கும் ஜனாதிபதியும் அரசாங்கமுமே இனவாத கருத்துக்களை பரப்பி வருகின்றன. அதனால் நாட்டுக்குள் மீண்டும் இனவாதத்தை தூண்ட வேண்டாம் என ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.
ஜனாதிபதி வடக்குக்கு சென்று தெரிவித்திருந்த கருததுக்கள் தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை (18) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் தெரிவித்த கருத்து தொடர்பில் மக்கள் மத்தியில் சர்ச்சை நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனால் மீண்டும் இனவாத்தை தூண்டாமல் நாங்கள் இலங்கையர்களாக ஒன்றாக எழுந்திருக்க வேண்டும்.
தெற்கில் ஒருவிதமாகவும் வடக்குக்கு சென்று அதனை வேறு விதமாகவும் சொல்லி, நாட்டு மக்களை ஏமாற்றுவதை தற்போதாவது நிறுத்தவேண்டும் என ஜனாதிபதியிடம் கேட்டுக்காெள்கிறோம்.
வடக்குக்கு சென்று பாரியளவில் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு, அதனை தெற்கில் விமர்சிக்கின்றனர். அதேநேரம் தமிழ், சிங்களம் முஸ்லிம் என பார்க்காமல் நாங்கள் இலங்கையர்களாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
இனவாதத்தை தூண்டுவதில்லை என அரசாங்கம் தெரிவித்துவருகின்றபோதும். ஜனாதிபதியும் அரசாங்கமுமே இனவாதத்தை தூண்டிவருகிறது. அதனால் மீண்டும் இனவாதத்தை தூண்ட வேண்டாம் என தயவாக கேட்டுக்கொள்கிறோம்.



