கல்வி மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பத்திலிருந்தே தவறாகவே முன்னெடுக்கப்படுகின்றன. தற்போது நடைமுறைப்படுத்தப்படுவது தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருந்த கல்வி திட்டம் அல்ல. 40 இலட்சம் மாணவர்களின் வாழ்க்கையுடன் அரசாங்கம் விளையாடிக் கொண்டிருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
பாடசாலைகள் நிறைவடையும் நேரம் மீண்டும் 1.30 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதற்காலிக தீர்மானம் என சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தற்காலிக தீர்மானம் என்போது நிரந்தர தீர்மானமாகும்? அண்மைக் காலங்களில் கல்வி மறுசீரமைப்புக்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்று நிரூபங்களை ஒன்று சேர்த்தால் புத்தகமொன்றை அச்சிட முடியும்.
நேர அட்டவணை தொடர்பில் மாத்திரம் 4 சுற்று நிரூபங்கள் வெளியிடப்பட்டுள்ளன.தற்போது வெளியிடப்பட்டுள்ள தற்காலிக சுற்று நிரூபத்தை மாற்றி பிரிதொன்று வெளியிடப்படும் போது இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். கல்வி மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பத்திலிருந்தே தவறாகவே முன்னெடுக்கப்படுகின்றன.
நாட்டின் கல்வி முறைமைக்கு மறுசீரமைப்பு அவசியம் என்பது இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வர முன்னரிலிருந்தே வலியுறுத்தப்படும் ஒரு விடயமாகும்.
2023ஆம் ஆண்டு மாற்றப்பட்டிருக்க வேண்டிய பாடத்திட்டங்கள் மாற்றப்படவில்லை. ஆனால் அரசாங்கம் அது குறித்து கவனம் செலுத்தவுமில்லை. தற்போது நடைமுறைப்படுத்தப்படுவது தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருந்த கல்வி திட்டம் அல்ல.
40 இலட்சம் மாணவர்களின் வாழ்க்கையுடன் அரசாங்கம் விளையாடிக் கொண்டிருக்கிறது. இந்த மறுசீரமைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்ட போதே நாம் இது இந்த அரசாங்கத்தின் திட்டங்கள் அல்ல என்பதை சுட்டிக்காட்டியிருந்தோம்.
இது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் முன்மொழியப்பட்ட திட்டமாகும். அதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் சுசில் பிரேமஜயந்தவும் நடைமுறைப்படுத்தாத திட்டத்தையே இந்த அரசாங்கம் நடைமுறைப்படுத்துகின்றது. தேசிய கல்வி நிறுவகத்துக்கு கூட இவை தொடர்பான புரிதல் இல்லை. அதிலுள்ள பிரதான
அதிகாரிகளுக்கும் தகுதிகள் இல்லை. இதனையும் நாம் ஆரம்பத்திலிருந்து வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம். இது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. கல்வி அமைச்சின் ஊடாக சகல விசாரணைகளையும் முன்னெடுக்க முடியும்.
ஆங்கிலப் பாடத்தொகுதியை தயாரித்தவர்களது பெயர் விபரங்கள் மிகத் தெளிவாகவுள்ளன. கல்விஅமைச்சு அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் அதனை விடுத்து காலத்தைக் கடத்துவதற்காகவே குற்றப்புலனாய்வுப் பிரிவுக்குச் சென்றுள்ளனர். மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடாமல் இந்த பிரச்சினைக்கு உடனடித்தீர்வினை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.



