“ஹோர்மூஸ் நீரிணையின் எதிர்காலத்தை ஈரானும் ஓமனும் மட்டுமே தீர்மானிக்கும்,” ஈரான் அறிவிப்பு

“ஹோர்மூஸ் நீரிணையின் எதிர்காலத்தை ஈரானும் ஓமனும் மட்டுமே தீர்மானிக்கும்,” என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி புதன்கிழமையன்று தெரிவித்தார்.

அவரது இந்தக் கூற்று, உலகின் பல்வேறு நாடுகளில் அமைந்துள்ள ஈரான் தூதரகங்களின் சமூக ஊடகப் பக்கங்களில் பகிரப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகமும் இச்செய்தியைப் பகிர்ந்ததோடு, மற்றொரு பதிவில், “எங்கள் இந்திய நண்பர்கள் பாதுகாப்பான கைகளில் உள்ளனர்; கவலைப்பட ஏதுமில்லை,” என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானும் அமெரிக்காவும் முரண்பட்ட நிலையில் உள்ளன. போர் தொடங்கியதிலிருந்து, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாடுகளின் கப்பல்களை மட்டுமே இந்த நீரிணை வழியாகச் செல்ல ஈரான் அனுமதித்து வருகிறது.

உலகளாவிய எரிசக்தி வர்த்தகத்தில் 20 சதவிகிதம் இந்த நீரிணை வழியாகவே நடைபெறுவதால், இந்த குறுகிய கடல் வழி மூடப்பட்டிருப்பது உலகளவில் எண்ணெய் விலைகள் கடுமையாக உயரக் காரணமாக அமைந்துள்ளது.