வடக்கில் செய்தவற்றின் பிரதிபலன் இன்று தெற்கில் கிடைக்கிறது… : சத்தியலிங்கம் எ.பி கருத்து

தெற்கில் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு போதைப்பொருள்  விநியோகிக்கப்படுகிறது என்று செய்தி வெளியாகியுள்ளதை பார்த்தேன். இதனை தான் தன்வினை தன்னைச் சுடும் என்பார்கள். 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் வடக்கில் செய்தவற்றின் பிரதிபலன் இன்று  தெற்கில் கிடைக்கிறது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பி. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) நடைபெற்ற  விளையாட்டில் ஊக்கு பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

விளையாட்டில் ஊக்கு பதார்த்தங்கள் பயன்படுத்துவது பொதுவானதாக காணப்படுகிறது. விளையாட்டு என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்தையோ அல்லது விளையாட்டு வீரர்களின்  பொருளாதாரத்தையோ மேம்படுத்துகின்ற நிலையில்  வெற்றிப்பெறுவதற்காக விளையாட்டு வீரர்கள் இந்த ஊக்குப்பதார்த்தங்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

விளையாட்டு வீரர்களுக்கு சம அந்தஸ்த்து வழங்கப்பட  வேண்டும். திறமைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படாத காரணத்தால் தான் எவ்வழியிலாவது வெற்றிப்பெற வேண்டும்  என்ற நோக்கத்தில்  ஊக்குப் பதார்த்தங்களை பயன்படுத்துகிறார்கள்.இதனால் ஏற்படும்  பின்விளைவுகள் பற்றி வீரர்கள் சிந்திப்பதில்லை.இந்த சட்டமூலம் இலங்கையின் விளையாட்டுத்துறையை  மேம்படுத்தும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

நாட்டில் போதைப்பொருள் கண்டுப்பிடிக்கப்படுவது தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் பாரதூரமானதாக பேசப்படுகிறது. அரசாங்கம்  ஆட்சிக்கு வந்து ஒருவருட காலத்தில் பல்வேறு பகுதிகளில் பெருந்தொகையான போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளது. செல்வந்தர்கள், ஒருசில அரசியல்வாதிகள் இந்த போதைப்பொருள் வர்த்தகத்தின் பின்னணியில் உள்ளார்கள்.

நாட்டில் இருந்து போதைப்பொருள் பாவனை மற்றும் வர்த்தகத்தை இல்லாதொழிப்பது என்பது அரசாங்கத்துக்கு சவால்மிக்கது. இந்தியாவில் வெளியாகும் ஆனந்த விகடன் என்ற சஞ்சிகையில்  இலங்கையை போதைப்பொருட்களாலும்,  மண்டை ஓடுகளாலும் சூழ்ந்த முத்து என்று  சித்தரிக்கும் வகையில் கேலிச்சித்திரம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

வடக்கில் புதைகுழிகள் தோண்டப்படுகின்றன, மண்டையோடுகளும்,மனித எச்சங்களும் கிடைக்கப்பெறுகின்றன.  தெற்கிலும் புதைகுழிகள் தோண்டப்படுகின்றன, பெருந்தொகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்படுகின்றன. அத்துடன் ஆயுதங்களும் கைப்பற்றப்படுகின்றன. வடக்கு மற்றும கிழக்கில் யுத்தம் இடம்பெற்றதா அல்லது தெற்கில் இடம்பெற்றதா என்ற சந்தேகம் காணப்படுகிறது.

யுத்தம் முடி வடைந்து ஓரிரு வருடங்களில் எமது மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் போதைப்பொருளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகள் வெளிப்படையாகவே மேற்கொள்ளப்பட்டன.பாடசாலை மாணவர்களை போதைப்பொருளுக்கு அடிமையாக்கும்  நோக்கில் ஒரு இனத்தை அழிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

தெற்கில் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு போதைப்பொருள்  விநியோகிக்கப்படுகிறது என்று செய்தி வெளியாகியுள்ளதை பார்த்தேன்.இதனை தான் தன்வினை தன்னைச் சுடும் என்பார்கள். 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் வடக்கில் செய்தவற்றின்  பிரதிபலன் இன்று  தெற்கில் கிடைக்கிறது.  செல்வந்த நாடு -அழகான வாழ்க்கை என்ற இலக்கை அடைய வேண்டுமாயின் அரசாங்கம் போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரத்தை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டும் என்றார்.