தமிழ் மக்களின் கண்களில் ஈரம் தொடரக் கூடாது…

இலங்கையில் நிலவிய முப்பதாண்டு கொடிய யுத்தத்தை சந்தித்த அவர்களின் துன்பதுயரங்கள் இன்னும் ஓய்ந்ததாக இல்லை என இலங்கையின் ஓய்வுபெற்ற பாடசாலை  அதிபர் எஸ்.ஜி.சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

கேள்வி:-

இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

பதில் :-

வடபகுதி மக்கள் பல்வேறு தழும்புகளையும் சுமந்தவர்கள். இலங்கையில் நிலவிய முப்பதாண்டு கொடிய யுத்தத்தை சந்தித்த அவர்களின் துன்பதுயரங்கள் இன்னும் ஓய்ந்ததாக இல்லை.இந்நிலையில் அவர்கள் எதிர்கொள்ளும் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கும் உடனடித் தீர்வு காணப்படுதல் வேண்டும்.

வடபகுதி மக்கள் இந்நாட்டின் எழுச்சிக்கும் கீர்த்திக்கும் புகழ் சேர்ந்தவர்கள்.இலங்கையில் பல உயர் பதவிகளை அலங்கரித்த பெருமைக்குரியவர்களாக அவர்கள் விளங்குகின்றனர்.அவர்களின் கலாசாரம் உலகளாவிய பெருமை கொண்டது.உலகுக்கு பல பாடங்களை கற்றுக் கொடுத்தவர்களாக நாம்அவர்களை அடையாளப்படுத்த முடியும்.கல்வித்துறையிலும் அவர்களின் பங்களிப்பு மெச்சத்தக்கதாகவே இருந்தது.கொடிய யுத்தத்துக்கு மத்தியிலும் அவர்கள் கல்வித் துறையில் காட்டிய ஆர்வம் பெரிதும் பாராட்டத்தக்கதாகும்.

இந்நிலையில் இலங்கையில் தமிழ் மக்கள் பல்வேறு புறக்கணிப்புக்களுக்கும் உள்ளான வரலாறுகள் மிகவும் கசப்பானவையாகும்.இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் தமிழ் மக்களின் உரிமைகள் திட்டமிட்டு வேரறுக்கப்பட்டமை குறித்து பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகின்றன.சுதந்திரத்தின் பின்னரும் இது ஓய்ந்ததாக இல்லை.1956 இல் தனிச்சிங்கள சட்டம் கொண்டு வரப்பட்டு தமிழ் மக்களின் மொழியுரிமை பறித்தெடுக்கப்பட்டது.இந்த நிலை தொடர்பாக பலரும் கண்டித்துப் பேசி இருந்தமையும் நீங்கள் அறிந்த விடயமாகும்.சிறுபான்மையினரை வலிந்து சிங்கள மொழியை ஏற்கும்படி நிர்ப்பந்திப்பது இனக்கலவரத்துக்கு வழிவகுக்குமென்று சிரேஷ்ட அரசியல்வாதி லெஸ்லி குணவர்தன மிகவும் தீர்க்க தரிசனத்துடன் முன்னதாகவே கூறியிருந்தார். “இலங்கைக்கு மிகப்பெரும் ஆபத்து வரவுள்ளது.அம்மக்கள் தமக்கு அநியாயம் நடப்பதாக உணர்ந்தால் அவர்கள் நாட்டிலிருந்து பிரிந்து போகக்கூடத் தீர்மானிக்கலாம்” என்றும் கருத்துக்கள் பலவும் எதிரொலித்தமையும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.

இதனைத் தொடர்ந்து வந்த காலங்களிலும் தமிழர் மீதான அடக்குமுறைகள் புதிய புதிய வடிவங்களில் மேலெழுந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.அரசியல், கல்வி, சமூக நிலைமைகள், பொருளாதாரம், நில ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழர்களின் அமைதி சீர்குலைக்குப்பட்டது.வரலாற்றில் இவையாவும் கறைபடிந்த அத்தியாயங்களாகும்.இத்தகைய புறக்கணிப்புக்கள் யுத்தத்தின் தோற்றுவாய்க்கு வலுசேர்த்தன இதனால் ஏற்பட்ட தழும்புகள் வடபகுதி மக்களின் மனங்களில் இன்னும் நிறைந்திருக்கின்றன.அத்தோடு இலங்கை தேசத்தின் தேகத்திலும் இந்தத் தழும்புகள் ஆழமாகவே பதிந்திருக்கின்றன என்பதையும் குறிப்பிட்டாதல் வேண்டும்.

இதேவேளை யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களை கவனத்தில் கொள்ளாது , இன்னும் திருந்தாத நிலையில் இனவாதிகள் இனவாத சிந்தனைகளை இன்னும் விதைத்து வருவது வெட்கக்கேடான செயலாகும்.இலங்கைக்கு இது சாபக்கேடோ என்று கூட எண்ணத் தோன்றுகின்றது.எனவே இனவாதிகள் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு நல்லிணக்கத்துக்கு வலுசேர்க்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

கேள்வி :-

இனப்பிரச்சினைக்கான தீர்வின் அவசியத்தை துரிதப்படுத்த வேண்டியமை குறித்து கூறுங்கள்?

பதில் :-

இலங்கையில் இனப்பிரச்சினை புரையோடிப்போய் இருக்கின்றது.இனப்பிரச்சினை உள்ளிட்ட தமிழ் மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் இன்னுமின்னும் அதிகமுள்ளன.இந்நிலையில் இவற்றுக்கு உடனடித் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டியது  மிகவும் அவசியமாகும்.

இலங்கையில் இனப்பிரச்சினை என்று ஒன்று இல்லை எனவும் இங்கு பயங்கரவாத பிரச்சினையே காணப்பட்டதாகவும் சில மேதாவிகள் தெரிவித்து வந்தனர்.எனினும் இதில் எவ்விதமான உண்மையும் இல்லை. இங்கு காணப்படும் தேசிய பிரச்சினைக்கு உடனடித் தீர்வினை அரசாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டும்.இனப்பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதில் ஆட்சியாளர்கள் இதய சுத்தியுடன் செயற்படுகின்றார்களா? என்று நோக்குகையில் விடை, இல்லை என்றே கிடைக்கின்றது.இது ஒரு மோசமான நிலையாகும்.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கண்ணீர்த் துளிகள் இன்னும் காய்ந்ததாக இல்லை.அவர்களின் கண்களில் இனியும் ஈரத்தை தொடரவிடக்கூடாது.இனப்பிரச்சினைக்கான தீர்வினை இழுத்தடித்துக் கொண்டும், தமிழ் மக்களை ஏமாற்றும் நோக்கிலும் எவரும் செயற்படுதல் கூடாது.கடந்தகால கசப்புணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு ” இலங்கையர்” என்ற பொதுவரையறைக்குள் நாட்டு மக்கள் அனைவரும் கைகோர்க்க வழி ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும்.அப்பாவி இளைஞர்கள் பலர் சிறைகளில் வாடுகின்றனர்.இவர்களின் விடுதலை தொடர்பில் கரிசனை காண்பிக்கப்படுதல் வேண்டும்.நிலங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுவதும் முக்கியமானதாகும்.அத்தோடு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு உரிய நீதியினை கிடைக்கச் செய்வதும் அவசியமாகும்.எவ்வாறாயினும் தூய்மையான அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதன் ஊடாக பல்வேறு சாதக விளைவுகளையும் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை மறுப்பதற்கில்லை.

கேள்வி:-

இலங்கையின் சமகால பொருளாதார பின்னடைவு பற்றி……

பதில் :-

இலங்கைக்கு இது போதாத காலமாகும்.ஊழல் மிக்க ஆட்சியாளர்களின் தூரநோக்கற்ற சிந்தனைகள் நாட்டை கெடுத்து குட்டிச்சுவராக்கி இருக்கின்றன.சுயநலவாத ஆட்சியாளர்களால் நாடு சீர்குலைந்திருக்கின்றது. சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் இலங்கையின் நம்பகத்தன்மை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் கடன் வழங்கும் நடவடிக்கைகளில்  இருந்தும் நாடுகள் பின்னடித்து வருகின்றன.சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன்களை பெற்றுக் கொள்ளும் செயற்பாடுகளும் இழூபறி நிலையினையே அடைந்திருக்கின்றன என்பதே உண்மையாகும்.இந்நிலையில் இதில் இருந்தும் மீள்வதென்பது இலகுவானதொரு காரியமல்ல.பல்வேறு தியாகங்கள், விட்டுக்கொடுப்புக்கள் இதற்கு அவசியமாகும்.

ஊழல்வாத ஆட்சியாளர்கள்  நாட்டின் செல்வத்தை சுருட்டிக் கொண்டுள்ள நிலையில் அப்பாவி பொதுமக்கள் இதற்கு தண்டனை அனுபவித்து வருகின்றனர்.அரைவயிறும் கால்வயிறுமாக இவர்கள் பட்டினியால் வாடும் நிலைமை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.இந்நிலை மாற்றப்பட்டு ஊழல்வாத ஆட்சியாளர்கள் சூறையாடிய பணத்தை மீளப்பெறுதல் வேண்டும்.இலங்கையின் சமகால பொருளாதார பின்னடைவு சகல துறைகளிலும் எதிரொலித்த வருகின்றது.நாட்டின் போஷாக்கு நிலைமைகள் வீழ்ச்சி கண்டுள்தோடு சிறுவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், முதியோர் ஆகிய பலரிடையேயும் மந்தபோஷணை அதிகரித்துள்ளது.இது ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்தவல்லதாகும்.இதனை உணர்ந்து நாட்டிலிருந்தும் மந்தபோஷணையை விரட்டியடிக்க உறுதிபூண வேண்டும்.உள்ளூர் உற்பத்தியினை அதிகரித்தல், அரச மற்றும் தனியார் துறைகளில் வீண் விரயத்தை குறைத்தல், ஏற்றுமதியை அதிகரித்தல் போன்ற பல நிலைமைகளின் ஊடாக பொருளாதார அபிவிருத்திக்கு வித்திடக் கூடியதாக இருக்கும்.

நேர்கண்டவர் :- துரைசாமி நடராஜா