கறுப்பு ஜுலை கலவரங்கள் ஜே.வி.பியினாலேயே நடத்தப்பட்டதாக பொய்யாகப் பரப்புரை செய்யப்பட்ட போதிலும், அக்கலவரங்களால் நாம் வெகுவாகப் பாதிக்கப்பட்டோம் என்பதே உண்மையாகும். ஜே.ஆர்.ஜெயவர்த்தன எனும் தனிமனிதனின் அதிகார வெறியினால் வடக்கு, கிழக்கு, தெற்கு என எவ்வித பேதமுமின்றி ஒட்டுமொத்த நாடும் பாரிய விலையைச் செலுத்தியிருக்கின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா சுட்டிக்காட்டினார்.
நந்தன வீரரத்ன என்பவரால் எழுதப்பட்டு, மனோரஞ்சனால் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட ‘நாட்டை உலுக்கிய 83 கறுப்பு ஜுலையின் ஏழு நாட்கள்’ எனும் புலனாய்வு நூல் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வொன்று ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வியாழக்கிழமை (9) கொழும்பிலுள்ள மகாவலி மைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய டில்வின் சில்வா மேலும் கூறியதாவது:
கறுப்பு ஜுலை பற்றிய இந்த நூலானது மறைக்கப்பட்ட அல்லது திரிபுபடுத்தப்பட்ட வரலாற்றின் உண்மைகளை வெளிக்கொணர்வதற்குப் பங்களிப்புச்செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜுலை கலவரம் தொடர்பில் பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அதேபோன்று 1988, 1989 களில் இடம்பெற்ற கலவரங்களை ‘ஜே.வி.பி கலவரம்’ என்று அடையாளப்படுத்துகின்றார்கள். ஆனால் உண்மையில் நாம் அந்தக் கலவரங்களைத் தோற்றுவிக்கவில்லை. மாறாக அவற்றால் வெகுவாகப் பாதிக்கப்பட்டோர்.
அதேபோன்று 1983 கறுப்பு ஜுலை கலவரத்தினால் நான் வெகுவாகப் பாதிக்கப்பட்டேன். ஏனெனில் அக்காலப்பகுதியில் நான் எமது கட்சியின் களுத்துறை மாவட்டம், பேருவளை ஒருங்கிணைப்பாளராகவும், முழுநேர கட்சி செயற்பாட்டாளராகவும் இருந்தேன். இருப்பினும் கலவரத்தை அடுத்து எமது கட்சியும் தடை செய்யப்பட்ட கட்சியாக அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து எமது அரசியல் செயற்பாடுகள் முடங்கியதுடன் அவற்றை இரகசியமாக முன்னெடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம்.
அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவுக்கு ஏகாதிபத்தியவாத அரசாங்கமொன்றைக் கட்டியெழுப்பவேண்டிய தேவையிருந்தது. அதற்காக தமிழர்கள் மீது ஒடுக்குமுறைகளைப் பிரயோகித்து, சிங்கள தேசியவாதத்தை முன்னிலைப்படுத்தினார்.
அதுமாத்திமன்றி அரசியலமைப்பின் ஊடாக சகல அதிகாரங்களையும் கொண்ட நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை அறிமுகப்படுத்தினார். அவ்வேளையில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத்தடைச்சட்டம் இப்போதும் நடைமுறையில் இருக்கின்றது. ஆனால் அதனை நீக்குவதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளும் எமது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு எமக்கும், மக்களுக்கும் எதிரான சகல ஒடுக்குமுறைகளும் திட்டமிட்டுப் பிரயோகிக்கப்பட்டன.
அதேவேளை ஜே.வி.பியினாலேயே கறுப்பு ஜுலை கலவரங்கள் நடத்தப்பட்டன என்ற கருத்துக்களும் தீவிரமாகப் பகிரப்பட்டன. எனவே தமிழ் மக்களின் மனங்களில் இக்கலவரங்களை நாம் (ஜே.வி.பி) தான் நடத்தினோம் என்ற எண்ணம் இருக்கின்றதா எனத் தெரியவில்லை. அதன் பின்னர் நாம் வடக்கில் உள்ள போராட்ட இயக்கங்களுடன் தொடர்புகளைப் பேணிவருவதாகவும் ஐக்கிய தேசியக்கட்சியினால் பரப்புரை செய்யப்பட்டது. இவ்விரு கருத்துக்களுக்கும் இடையிலேயே பாரிய முரண் காணப்படுகின்றது. இவ்வாறு ஜே.ஆர்.ஜெயவர்த்தன எனும் ஒரு தனிமனிதனின் அதிகார வெறியினால் வடக்கு, கிழக்கு, தெற்கு என எவ்வித பேதமுமின்றி ஒட்டுமொத்த நாடும் பாரிய விலையைச் செலுத்தியிருக்கின்றது என்றார்.