பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்த பேச்சுவார்த்தைக்காக மேலதிக தொழில் ஆணையாளர் நாயகம் எச்.ஜீ.எப். குணவர்தனவினால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கமைய வெள்ளிக்கிழமை (17) சம்பள நிர்ணய சபை கூடியது.
கொழும்பு, நாரஹேன்பிட்டவிலுள்ள தொழில் திணைக்களத்தில் பிற்பகல் 2 மணிமுதல் சுமார் ஒரு மணித்தியாலம் இக்கூட்டம் இடம்பெற்றது. எவ்வாறிருப்பினும் இதில் பெருந்தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதிகள் எவரும் கலந்து கொண்டிருக்கவில்லை.
கம்பனிகள் இவ்வாறு முதற்கட்ட கூட்டங்களை புறக்கணிப்பதும், உதாசீனப்படுத்துவதும் வழமையான விடயமாகும். ஆனால் கடந்த காலங்களில் இந்த பேச்சுவார்த்தைகளில் ஆர்வமாகப் பங்கேற்ற மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தொழிற்சங்கமான அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதியும் தற்போதைய பதுளை மாவட்ட ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான கிட்னண் செல்வராஜ் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து அவரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வினவிய போது தான் பதுளையில் இருப்பதாகத் தெரிவித்தார்.
அந்த வகையில் சம்பள நிர்ணய சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 10 பெருந்தோட்ட தொழிற்சங்கங்களில் 8 தொழிற்சங்கங்களும், அரசாங்கத்தின் சார்பில் 3 நியமன உறுப்பினர்களும் தொழில் திணைக்களத்துக்கு வருகை தந்திருந்தனர்.
தொழிற்சங்கங்கள் சார்பில் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் சிரேஷ்ட சட்ட ஆலோசகர் கே.மாரிமுத்து, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சி.முத்துக்குமார், விவசாய தோட்ட தொழிலாளர் காங்ரஸ் சார்பில் ஆர்.எம்.கிருஸ்ணசாமி, இலங்கை செங்கொடி சங்கத்தின் சார்பில் அதன் ஆலோசகர் மேனகா கந்தசாமி மற்றும் பி.ஜி.சந்திரசேன உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகளே இதில் பங்கேற்றவர்களாவர்.
சம்பள நிர்ணய சபையைக் கூட்டுவதற்கு இரு தரப்பிலும் ஆகக் குறைந்தது இரு பிரதிநிதிகளாவது பங்கேற்க வேண்டும் என்பதே கோரமாகும். எனினும் இம்முறை கம்பனிகள் சார்பில் ஒருவர் கூட பங்கேற்காததால் சட்ட ரீதியாக சபையை கூட்ட முடியாது என சம்பள நிர்ணய சபையின் தலைவர் எச்.கே.கே.ஏ.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும் இலங்கை செங்கொடி சங்கத்தின் சார்பில் அதன் ஆலோசகர் மேனகா கந்தசாமியால் இதன் போது பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் தற்போதைய வாழ்க்கை செலவுக்கேற்ப 2000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
கோரம் இன்மையால் குறித்த யோசனை தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவில்லை. அத்தோடு தொழில் ஆணையாளர் நாயகம் மற்றும் சம்பள நிர்ணய சபையின் தலைவரும் எந்தவொரு நிலைப்பாட்டையும் தெரிவிக்கவில்லை. இம்மாத இறுதிக்குள் பேச்சுவார்த்தைகள் நிறைவு செய்யப்பட்டு, நவம்பர் 20ஆம் திகதிக்குள் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை தொழில் அமைச்சர் அறிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே நீதிமன்ற உத்தரவுக்கமைய அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர்களால் தொழிற்சங்கங்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.
கம்பனிகளுக்கு தேயிலை நிர்ணய சபை கூடவுள்ளதாக முன்னதாவவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், ஒரு பிரதிநிதியைத் தவிர வேறு எவரும் தம்மால் பிரசன்னமாக முடியாது என அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. கம்பனிகளின் இந்த தன்னிச்சையான செயற்பாட்டுக்கு தொழில் ஆணையாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் மறு திகதி அறிவிக்கப்படாமலேயே சம்பள நிர்ணய சபை ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.