தேர்தல் விஞ்ஞாபனம் என்பது வாக்காளர்களை கவர்வதற்கான புழுகு மூட்டை-விக்கி

தேர்தல் விஞ்ஞாபனம் என்பது தேர்தல் காலத்தில் வாக்காளர்களைக் கவர்ந்து நம்பக்கம் இழுப்பதற்கான ஒரு தந்திரோபாயம் நிறைந்த புழுகு மூட்டை என்று அறிந்து கொண்டேன் என முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்று (19.07.2020) தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பரப்புரைக் கூட்டம் உடுவிலில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

தொடர்ந்து அங்கு உரையாற்றிய அவர்

2013ம் ஆண்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்தின் கீழ் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு அமோக வாக்குகளைப் பெற்று முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட நான் மீண்டும் 2020ல் நடைபெறவிருக்கின்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்ற புதிய கட்சியின் கீழ் மீன் சின்னத்தில் போட்டியிடுவதையிட்டு நீங்கள் சில வேளைகளில் குழப்பமடையலாம்.

2013ம் ஆண்டில் மாகாணசபை தேர்தலில் போட்டியிடுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்னை வலிந்து இழுத்த போது எனது ஓய்வு காலத்தை நான் இலக்கியம் சமயம், சமூகம் சார்ந்த வழிகளில் செலவிட்டுக் கொண்டிருந்தேன். ஆகவே என்னை அரசியலுக்குள் அழைத்ததும் முதலில் மறுத்தேன். பல மாதங்கள் மறுத்தேன். இருந்த போதும்; தொடர் அழுத்தங்கள் காரணமாக ஆண்டவன் சித்தம் அதுவே என எண்ணி அரசியலில் காலடி எடுத்து வைத்தேன்.

நான் அரசியலில் காலடி எடுத்து வைத்த போது பணம் சம்பாதிக்கும் நோக்கமோ அல்லது ஒரு அரசியல் பிரபலமாக மாறவேண்டும் என்ற எண்ணமோ இருக்கவில்லை. மாறாக எனது உடன் பிறப்புக்களாகிய தமிழ் மக்களின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் அரசுடன் பேசி ஏதாவது நன்மையான விடயங்களை முன்னெடுக்கலாம் என்ற எண்ணப்பாட்டிலேயே அரசியலில் காலடி எடுத்து வைத்தேன்.

அப்போது வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களும் என்னைக் கவர்ந்தன. ஆனால் தேர்தல்கள் முடிவுற்று நான் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களின் அடிப்படையில் நடக்கக் காலடி எடுத்து வைக்க முற்பட்ட போதே இன்னோர் விடயத்தை விளங்கிக் கொண்டேன்.

அதாவது தேர்தல் விஞ்ஞாபனம் என்பது தேர்தல் காலத்தில் வாக்காளர்களைக் கவர்ந்து நம்பக்கம் இழுப்பதற்கான ஒரு தந்திரோபாயம் நிறைந்த புழுகு மூட்டை என்று அறிந்து கொண்டேன். இந்த விடயத்தில் பொது மக்களும் நல்ல தெளிவுடன் இருந்தார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஆகப்போவது எதுவுமில்லை. ஆனால் எமது ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் முகமாக அனைவரும் திரண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பை அமோக வெற்றி பெறச் செய்வோம் என்று கூறியே கூட்டமைப்புக்கு வாக்களித்தனர்.

ஆனால் கடந்த 5 வருட காலப் பகுதியில் கூட்டமைப்பின் செயற்பாடுகள் தமிழ் மக்களை படுகுழியில் தள்ளிவிடுவதற்கு ஒப்பானதாக அமைந்துள்ளன. அவையாவன

1. 2015ம் ஆண்டில் வடமாகாணசபையில் என்னால் முன்மொழியப்பட்ட இனஅழிப்பு தீர்மானத்தை மறுத்து உண்மையில் இன அழிவு இருக்கவில்லை என்று உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பரப்புரை செய்தமை.

2. இராணுவமயமாக்கப்பட்ட வடக்குக் கிழக்கு பகுதிகளில் இருந்து இராணுவம் முற்றாக வெளியேற்றப்பட வேண்டும் என்ற சர்வதேச சமூகத்தின் கோரிக்கைக்கு மாறாக தனியார் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற்றப்பட்டால் மட்டும் போதுமானது என வாதிட்டமை.

3. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போதிய ஆசனங்களுடன் அரசாங்கத்தை முண்டு கொடுக்கக்கூடிய நிலையில் இருந்தும் தமிழ் மக்களுக்கென எந்த ஒரு அனுசரணையையும் கோராமை. ஆகக் குறைந்தது எமது தமிழ்க் கைதிகளை உடனே விடுதலை செய் என்று கோரியிருக்கலாம்.

4. தமிழ் மக்களுக்கென நீதிமன்றில் வாதாட வேண்டிய பல விடயங்கள் இருந்தும் அவற்றைப் புறக்கணித்து இரணில் விக்கிரம சிங்கவை பதவியில் நிறுத்த பாடுபட்டமை.

5. பாராளுமன்றத்தின் அதி பலம் பொருந்திய எதிர்க்கட்சி தலைமை இவர்களுக்கு கிடைத்த போதும் முறையான பலப் பிரயோகத்தின்கீழ் எமது உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கு மாறாக நிபந்தனைகள் ஏதுமற்ற ஒத்துழைப்புக்களை நல்கி அரசினால் முன்மொழியப்பட்ட வரவு செலவு திட்டங்களைத் தொடர்ந்து அங்கீகரித்தமை.

6. இவை அனைத்துக்கும் மேலாக தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களில் இராணுவத்தின் அத்துமீறிய குடியேற்றம் நடந்த போதும் மற்றும் தொல்பொருள் திணைக்களம், வன இலாகாகனிய வளம் போன்ற திணைக்களங்களின் போலி ஆவணங்களுடன் தமிழர்களின் பூர்வீகச் சொத்துக்களை வேற்றார் சூறையாடிய போதும் எதுவும் பேசாது அமைதி காத்தமை.

மேலும் வடமாகாண சபையில் எம்மால் முன்மொழியப்பட்ட இனவழிப்புத் தீர்மானத்தை வடமாகாணசபை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி,ஏன் சிங்களச் சகோதரர்கள் கூட ஏற்றுக் கொண்டபோதும் அத் தீர்மானத்திற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தார்கள். தொடர்ந்தும் மாகாணசபையை இயங்கவிடாமல் தடுத்ததுடன் என்மீது நம்பிக்கை இல்லாப் பிரேரணையை முன்வைத்து என்னை முதலமைச்சர் பதவியில் இருந்து ஓரங்கட்டிவிட வேண்டுமென்று நடவடிக்கைகள் எடுத்தார்கள்.

ஆனால் அத் தருணத்தில் பொதுமக்களாகிய நீங்கள் கிளர்ந்தெழுந்து உங்களது அமோக ஆதரவையும் வரவேற்பையும் வெளிப்படுத்து முகமாக பல்லாயிரக் கணக்கில் எனது வீட்டு வாசலில் கூடி முழுமையான ஆதரவை நல்கிய போதுää அவர்கள் பெட்டிப்பாம்பாக அடங்கிக் கொண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணை நடவடிக்கைகளைக் கைவிட்டுவிட்டனர்.

அதற்கு பின்னரும் கூட நான் எதுவித சலனமுமின்றி இணைந்து பணியாற்றிய போதும் தலைமைகள் அமைதி காக்க இடைச் செருகல்கள் தீர்மானங்களை மேற்கொள்ளத் தொடங்கினர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் நலன்களைக் காக்கும் பணியில் இருந்து வெகு தூரம் விலகிச் சென்று சொத்து சேர்ப்பதிலும், சொகுசு பங்களா வாழ்க்கை வாழ்வதிலும் குடும்ப உறுப்பினர் முன்னேற்றத்திலும், வரிவிலக்கு சொகுசு கார்களைப் பெறுவதிலும் ஈடுபட்டு திசை மாறிய நிலையில் தொடர்ந்தும் இவர்களுடன் பயணிப்பதில் பலனில்லை என்ற தீர்மானத்திற்கு வந்தேன். ஆகவே தான் நாம் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளோம்.

எமது நடவடிக்கைகள் அனைத்தும் நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒரு செயற்பாடாகவே அமைந்திருப்பதால் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய அறிவார்ந்தோரின் கூட்டு முயற்சியாகவே எமது நடவடிக்கைள் தொடரும். ஆகையால் தனிமனித செயற்பாடுகளோ அல்லது தீர்மானங்களோ வலுவற்றுவிடுவன.
எம்மைப் பொறுத்த வரையில் அமைச்சுப் பதவியோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர் பதவியோ முக்கியமில்லை.

மாறாக எமது கருத்துக்களையும்ää முன்மொழிவுகளையும் உலக அரங்கில் எடுத்துக்கூறவும் பரகாரங்களைப் பெறவும் எமக்கு ஒரு அரசியல் அந்தஸ்து தேவை. அதன் அடிப்படையிலேயே தேர்தலில் களமிறங்கியுள்ளோம்.

தமிழர்களின் பூர்வீகச் சொத்துக்கள் வாழ்விடங்கள்வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றை பாதுகாக்கவும்,இலங்கையின்பூர்வீகக் குடிகள் ஆதி சைவர்களே என்பதை ஆதாரபபூர்வமாக நிரூபித்து மதத் தலைவர்களையும் சிங்கள மக்களையும் ஒரு தெளிவு நிலைக்கு இட்டுச் செல்லவும்,  எமது மக்கள் வடக்கு கிழக்கு பகுதிகளில் தமது சுயநிர்ணய உரிமைகளுடன் வாழ வழிவகுக்கும் செயற்பாடுகளில் ஈடுபடச் செய்வதற்கும் ஏதுவாக எதிர்வரும் ஆகஸ்ட் ஐந்தில் உங்கள் பொன்னான வாக்குகளை மீன் சின்னத்திற்கு அளித்து அமோக வெற்றியீட்டச் செய்யுங்கள் என அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.