கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயம் இருந்த பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் அகழ்வுப்பணிகளை நடத்த ஏற்பாடு

WhatsApp Image 2026 01 01 at 2.03.15 PM கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயம் இருந்த பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் அகழ்வுப்பணிகளை நடத்த ஏற்பாடு

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயம் இருந்த பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் அகழ்வுப்பணி மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அதற்காக குறித்த பகுதியில் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக அதற்கான முன்னாயத்த வேலைகள் இடம்பெற்று வருகின்றன.

குறித்த பகுதியில் அகழ்வுப் பணியை மேற்கொண்டு ஆய்வுகளை செய்வதற்காக தொல்லியல் திணைக்களத்திற்கு தற்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையிலேயே குறித்த பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. அத்துடன் குறித்த பகுதியில் பாரிய புத்தர் சிலை ஒன்று அவசர அவசரமான திறந்து வைக்கப்பட்டிருந்தமையும் பாரிய விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

இந்நிலையில் தமிழ் மக்களின் பார்வையில் தொல்லியல் திணைக்களம் பௌத்தத்திற்குரிய திணைக்களமாகவே இயங்கி வருவதால் நியாயமான முறையில் ஆய்வு மேற்கொள்ளப்படுமா என்ற சந்தேகம் நிலவுவதாகவும் இதனால் குறித்த பணியின்போது பார்வையாளர்களாக தமிழ் தரப்பினரையும், அவர்களது அபிப்பிராயங்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கன்னியா வெந்நீரூற்றை அண்மித்த பகுதியில் தனியார் காணியில் அமைக்கப்பட்டிருந்த மாரியம்மன் அறக்கட்டளைக்குச் சொந்தமான 200 வருடங்கள் பழமையான பிள்ளையார் ஆலயமானது 2002ஆம் ஆண்டு காலப்பகுதியில் புனருத்தாரன பணிக்காக உடைக்கப்பட்டபோது தொல்லியல் திணைக்களத்தினால் அப்பகுதி தொல்லியலுக்கு உரியது என அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.

பின்னர் குறித்த பகுதியில் பௌத்த விகாரை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக கூறி குறித்த காணியின் உரிமையாளரும், பிள்ளையார் ஆலயத்தின் அறங்காவலருமான கோகிலரமணி என்பவரால் திருகோணமலை மேல் நீதிமன்றில் 29.07.2019 அன்று வழக்கு தொடரப்பட்டதைத் தொடர்ந்து குறித்த பகுதியில் பௌத்த விகாரை கட்டுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டதுடன் பிள்ளையார் கோவில் கட்டுவதற்காக கன்னியா வெந்நீரூற்றின் நுழைவுப்பகுதியின் இடது பக்க மூலையில் 10 பேர்ச் காணி வழங்கப்பட்டிருந்தது.

1623 – 1638 ஆண்டு வரை பறங்கிய படைத் தளபதியாக இருந்த நபரால் மடத்தடி மாரியம்மன் ஆலயத்திற்கு நன்கொடையாக கொடுக்கப்பட்ட ஒரு பிரதேசமே கன்னியா வெந்நீரூற்றும் பிள்ளையார் ஆலயமும் என்பதும் பல ஆவணங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.