டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 600ஐ கடந்தது…

டித்வா சூறாவளி காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இதுவரை 611 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் மாத்திரம் 232 என்ற அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ளன.
அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் 89 உயிரிழப்புகளும் பதுளை மாவட்டத்தில் 83 உயிரிழப்புகளும் குருநாகல் மாவட்டத்தில் 61 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. நாடளாவிய ரீதியாக 213 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், இந்த அனர்த்தத்தால் 5 இலட்சத்து 76 ஆயிரத்து 626 குடும்பங்களைச் சேர்ந்த 20 இலட்சத்து 54 ஆயிரத்து 535 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 4 ஆயிரத்து 309 வீடுகள் முழுமையாகவும் 69 ஆயிரத்து 635 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

இதேவேளை, நாட்டில் பாரிய அனர்த்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரண கொடுப்பனவு வழங்குவதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதலைத் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் மூலம் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள இந்தச் சுற்றறிக்கையில், பாதிக்கப்பட்ட வீடுகளின் அனைத்து வகைகளுக்கும் இந்தக் கொடுப்பனவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதலின்படி, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டுப் பிரிவும் இந்த கொடுப்பனவை பெறத் தகுதியுடையதாகும். மேலும், நிதியை பிரித்துக் கொடுப்பதற்கு முன்னர் சேத மதிப்பீடு எதுவும் தேவையில்லை.
காணி அல்லது சொத்துரிமை எதைப் பற்றியும் கருத்தில் கொள்ளாமல் இந்த கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.