கல்வித்துறை சந்தித்து நிற்கும் நெருக்கடியானது பொறுப்பில்லாத சமுதாயத்தையே கட்டாயம் உருவாக்கும்! | ஞானகி பவானந்தம் ஆசிரியை, யாழ் வட இந்து ஆரம்ப பாடசாலை.

102 Views

நேர்காணல் :- இரா. ம.அனுதரன்.

இலங்கைத் தீவு தற்போது சந்தித்து நிற்கும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்குள் பல்வேறு துறைகள் முடக்க நிலையை சந்தித்து வருகின்ற நிலையில், நாளைய தலைமுறையினரை நற்பிரஜைகளாக சமூகத்திற்கு பிரசவித்துவரும் கல்வித்துறை சந்தித்து வரும் நெருக்கடிகளானது, இளம் பராயத்தினர் முதற்கொண்டு உயர்நிலை கல்வி கற்பவர்களது எதிர்காலத்தினையே பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

கடந்த யுத்த காலத்தில் தற்போதைய நெருக்கடிகளைவிட மலையளவு நெருக்குவாரங்களுக்கு மத்தியில் வடக்கு, கிழக்கு வாழ் தமிழர்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட போதிலும் கல்வியில் முதன்மையானவர்களாகத் திகழ்ந்து வந்த நிலையுடன் ஒப்புநோக்குகையில் தற்கால நெருக்கடியென்பது சவாலான விடயமல்ல.

இருப்பினும் நெருக்கடிசூழ் வாழ்வியலுக்கு முற்றிலும் மாறுபட்டதான சுக-போக வாழ்விற்குள் ஆயுத மௌனிப்பின் பின்னரான காலத்தில் நவ-நாகரீகத்தின் பெயரில் எம்மை நாமே சிறைப்படுத்திக் கொண்டதுடன் பிள்ளைகளையும் அவ்வாறான அதி சொகுசு நிலை வாழ்க்கைக்குள் பாசத்தின் பெயரால் உந்தித்தள்ளியே வந்துள்ளோம், வருகின்றோம். இந்நிலையே, தற்போதைய நெருக்கடிகளை கண்டு துவண்டுவிடுமளவிற்கு எமது பிள்ளைச் செல்வங்களை. ‘புறொய்லர் கோழி’ களாக்கியுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆரம்பித்த சமூக முடக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலையென்பது தற்போது அதியுச்ச நிலையைத் தொட்டுள்ளது. குறித்த 3 ஆண்டுகளில் கல்வித்துறை சந்தித்துள்ள நெருக்கடிகள் பின்னடைவுகள் என்பது நாளை எமது சமூகத்தை வழிநடத்தும் இளம் தலைமுறையினரைப் பொறுப்பற்றவர்களாக்க மாற்றிக் கொண்டிருக்கிறது.

இவ்வாறான சூழ்நிலையில், யாஃ வட இந்து ஆரம்ப பாடசாலையில் ஆசிரியையாக கடமையாற்றிவரும் திருமதி ஞானகி பவானந்தம் அவர்கள் இலக்கு மின்னிதழுக்காக வழங்கிய செவ்வி…

கேள்வி: பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி மற்றும் மின்தடை காரணமாக கல்வி செயற்பாடுகளை முன்னெடுப்பதில் உள்ள சவால்கள்?

WhatsApp Image 2022 07 07 at 9.57.49 PM கல்வித்துறை சந்தித்து நிற்கும் நெருக்கடியானது பொறுப்பில்லாத சமுதாயத்தையே கட்டாயம் உருவாக்கும்! | ஞானகி பவானந்தம் ஆசிரியை, யாழ் வட இந்து ஆரம்ப பாடசாலை.
பதில்: எங்கட பகுதியில் உள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஆரம்பக் கல்வி, இடைநிலைக் கல்வி, உயர்நிலைக் கல்வி எனச் சகல பிரிவுகளிலும் கல்வி செயற்பாடுகளை முன்னெடுப்பதென்பது பாரிய சவாலாகவே உள்ளது.

ஆரம்பக் கல்வி மாணவர்களது நிலை மிகவும் கவலையளிப்பதாகவே உள்ளது. இன்றைய பொருளாதார நெருக்கடி ஒவ்வொரு குடும்பத்தையும் பாதித்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும் உணவு நெருக்கடியேற்பட்டிருக்கு. தினக்கூலி வருமானத்தை நம்பியிருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் பெரும்பாலும் சாப்பிடாமலேயே தான் பாடசாலைகளுக்கு வருகின்றனர். இவ்வாறு பசித்த வயிற்றுடன் வரும் மாணவர்களால் கல்வியில் கவனம் செலுத்த முடிவதில்லை. இதனால் காலை வேளை பாடங்களை முன்னெடுக்க முடியாத நிலையேற்பட்டுள்ளது.

ஆரம்பக்கல்வி கற்கும் மாணவர்களுக்கு இலவச மதிய நேர உணவு இதுவரை காலமும் வழங்கப்படடு வந்த நிலையில் தற்போது கடந்த சில மாதங்களாக அத்திட்டம் இடைநிறுத்தப்பட்டிருக்கு. இதனால் பிள்ளைகள் பெரும்பாலும் பட்டினியுடன் இருக்கவேண்டியதாகிறது. அவர்கள் சாப்பிடாமல் இருக்க நாங்கள் எப்பிடி சாப்பிட முடியும்? பெரிய சங்கடமான நிலையில்தான் ஒவ்வொரு நாளும் கடந்து செல்லும்.

மின்தடை காரணமாகவும் கற்பித்தல் நடவடிக்கைகளைச் சீராக முன்னெடுக்க முடிவதில்லை. பாடசாலைகளுக்கு சென்று அங்கிருந்து இணைய வழியூடாக கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற போது அதற்கான வசதி வாய்ப்புகள் பற்றாக்குறையாகவே உள்ளது. ஸ்மார்ட் ரூம் வசதி ஒவ்வொரு பாடசாலைகளிலும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. இந்நிலையில் மின் தடை ஏற்படும்போது முற்றாகவே இணைய வழிக் கற்பித்தலை மேற்கொள்ளமுடியாத நிலையேற்படுகிறது. பாடசாலைகள் நடைபெறும் நாட்களில் கூட இதனால் உரிய முறையில் எங்களால் கல்வியை தொடரமுடியாத நிலையை இன்றைய நிலையில் ஆசிரியர்கள் எதிர்நோக்கியுள்ளோம்.
WhatsApp Image 2022 07 07 at 9.57.51 PM 1 கல்வித்துறை சந்தித்து நிற்கும் நெருக்கடியானது பொறுப்பில்லாத சமுதாயத்தையே கட்டாயம் உருவாக்கும்! | ஞானகி பவானந்தம் ஆசிரியை, யாழ் வட இந்து ஆரம்ப பாடசாலை.வீடுகளின் நிலையை எடுத்துப்பார்த்தால் அங்கும் மின்தடை பெரும் இடையூறாகவே இருக்கு. தற்காலப் பிள்ளைகள் பிறந்தது முதல் மின்சார வெளிசத்திலேயே வளர்ந்தவர்கள். திடீரென மின்சார தடையேற்பட்டவுடன் விளக்கு வெளிச்சத்தில படிக்க முடியாத நிலையேற்பட்டுள்ளது. யுத்த காலத்தில் நாங்கள் படிக்கும் போது மின்சாரம் அறவே இல்லை. அந்த சூழலுக்கு பழக்கப்பட்டு நாங்கள் வளர்ந்த காரணத்தினால் ஜாம் போத்தல் விளக்கு வெளிச்சத்தில் தான் நாங்கள் படிச்சு முன்னுக்கு வந்தனாங்கள். ஆனால் இன்றைக்கு சூழல் அப்படி இல்லை. மின் தடை ஏற்பட்டால் படிக்க முடியாது என்ற மனநிலையில் தான் ஒவ்வொரு பிள்ளைகளும் இருக்கினம்.

கேள்வி: கொரோனா பெருந்தொற்று முடக்க காலத்தில் இருந்தே பாடசாலை கல்வி நடவடிக்கைகள் சீரான முறையில் இயங்க முடியாது முடங்கிப்போயுள்ளது. இணையவழி கல்வி நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுக்கும் நிலையே காணப்படுகிறது. இவ் இணைய வழி கற்பித்தல் செயற்பாடுகளின் போதான சவால்கள்…?

பதில்: கொரோனா காலத்தில இருந்து சுமார் மூன்று ஆண்டுகளாக தொடரும் இந்நிலையானது கல்வி நிலையைப் பின்தள்ளியுள்ளது. கொரோனா நெருக்கடி ஆரம்பத்தில் முன்பள்ளிக் கல்வியை ஆரம்பித்த பிள்ளைகள் மற்றும் ஆரம்பிக்க இருந்த பிள்ளைகள் குறிப்பாக 2016,ல் பிறந்த பிள்ளைகள் இன்று ஆரம்ப கல்விக்குள் வந்துள்ளார்கள். இடைப்பட்ட 3 ஆண்டுகள் அவர்கள் சரியான முறையில் கல்வியை முன்னெடுக்க முடியாத காலகட்டமாகவே இருந்தது. இப்போது தரம்-1 மற்றும் தரம்-2 இல் கல்வி கற்கும் பிள்ளைகளுக்கு அவர்களுக்கான ஆரம்ப கல்வி என்பது சரியாக கிடைக்காத நிலையே காணப்படுகிறது. கொரோனா காலத்திலயும் பிள்ளைகள் ஒழுங்காக பாடசாலைக்கு செல்லவில்லை.இ,ப்ப எரிபொருள் பிரச்சினையால் ஒழுங்காக செல்ல முடியாத நிலை எங்கட நாட்டில ஏற்பட்டிருக்கு. இவ்வாறு பாடசாலைக்கு செல்லமுடியாது கல்வி செயற்பாடுகளை ஈடுபட முடியாது முழுமையற்ற காலத்தை கடத்திச் செல்லும் நிலையேற்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க இவ்வாறான பிள்ளைகள் எந்தவித கல்விச்சூழலும் இல்லாத வெறுமை நிலையும் ஏற்பட்டிருக்கு. எங்கட காலத்தில முன்பள்ளி பருவத்தில விளையாட்டு போட்டி இருக்கும். கலை-கலாசார நிகழ்வுகள் இருக்கும். ஆத்திசூடி, திருக்குறள் உள்ளிட்டவற்றை மனனம் செய்யும் போட்டிகள் நடத்தப்படும். இவ்வாறான போட்;டி நிகழ்வுகளில் ஒவ்வொரு மாணவர்களும் கட்டாயம் பங்குபற்ற வேண்டும். இப்படியான அனுபவங்களுடன் தான் பிள்ளைகள் ஆரம்ப கல்விக்குள் நுழையும் நிலை முன்பிருந்தது. இப்போது திருக்குறளே தெரியாமல் தான் பிள்ளைகள் வளர்ந்து கொண்டு வருகினம்.

இவ்வாறு போட்டிகள், நிகழ்வுகளில் பங்குபற்றுவதென்பது பரிசில்களை பெறுவதற்கானது மட்டுமல்ல பலர் மத்தியில் பங்கேற்பதன் மூலம் அவர்களது ஆற்றல்;களை மேம்படுத்தவும் உதவுகிறது. பிள்ளைகளுக்குள் மறைந்திருக்கும் ஆற்றல்களையும், திறமைகளையும் வெளிப்படுத்தும் வாய்ப்பாக இச்சந்தர்ப்பங்கள் அமைகின்றன. இவ்வாறான எந்த அனுபவங்களும் இல்லாமல் வெறுமையான நிலையிலேயே ஆரம்பக் கல்விக்குள் நுழையும் தற்கால நிலையானது, பிள்ளைகளைச் சமூகத்தை எதிர்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளியுள்ளது. தலைமைத்துவ பண்புகளற்ற சமூதாயம் ஒன்று இக்காலத்தில் உருவாகிவருகின்றது.

கேள்வி: எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஆசிரியர்கள், மாணவர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் கல்வி செயற்பாட்டை முன்னெடுப்பதில் எவ்வகையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன…?

பதில்: தற்போதைய நிலையில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்களுக்கு மட்டும் தான் எரிபொருள் விநியோகம் என அரசாங்கம் அறிவித்திருக்குது. இவ்வாறான வரையறைக்குள் ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விச் சமூகத்தினர் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. அத்தியாவசிய சேவைக்குள்ள கல்வி இல்லை என்பதை இந்த நிலையேற்படுத்தியிருக்கு. கல்வி அத்தியாவசிய சேவையாக இல்லாட்டி எப்படி நல்லதொரு சமூதாயத்தை உருவாக்குவது? எதிர்காலம் எவ்வாறு போகப்போகுது? என்ற கவலை ஏற்படுகிறது.

முன்னர் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது எரிபொருள் பிரச்சினை காரணமாக பாடசாலைகளுக்கு செல்ல முடியாத நிலையேற்பட்டுள்ளது. நகர்ப்புற, கிராமப்புற பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள், அதிபர்கள் உள்ளிட்ட கல்விசார் உத்தியோகத்தர்கள் செல்லமுடியாத சூழ்நிலையேற்பட்டுள்ளது. பாடசாலை நாட்கள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கு. இதனால் இலங்கையில் சமநிலையான கல்வியை முன்னெடுக்க முடியாத நிலையேற்பட்டுள்ளது.

தற்போது பாடசாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருப்பினும். முன்னர் வாரத்திற்கு 3 நாட்கள் பாடசாலை இயங்க வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்திருந்தது. எரிபொருளை பெற்றுக்கொள்ள வழிமுறைகள் எதனையும் ஏற்படுத்தாது வாரத்தில் 3 நாட்களாக இருப்பினும் ஆசிரியர்கள், அதிபர்கள், மாணவர்கள் எவ்வாறு பாடசாலைகளுக்கு சென்றுவர முடியும்? இவ்வாறான நிலையில் கல்வியைப் புறக்கணித்து ஏனைய சில துறைகளை அத்தியாவசிய சேவையாக கருதி எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கல்வி அத்தியாவசிய சேவையாகக் கருதப்படாத இன்றைய சூழலில் கல்வி நிலை எங்க போகப்போகுது என்று எங்களுக்கும் தெரியவில்லை.

பாடசாலைகளுக்கு விடுமுறை என்றால் வேலை இல்லைத்தானே. வீட்டில் சும்மாதானே இருக்கினம் என்று பலரும் நினைப்பார்கள். எங்கட உள்ளக்குமுறல் யாருக்கும் தெரியாது. எங்கட பிள்ளைகளும் இவ்வாறு கல்வி செயற்பாடுகள் பாதிக்கப்பட்ட நிலையில் வீடுகளில் தான் இருக்கினம்.

இதெல்லாம் கடந்து போகும் போது 100 நாள் வேலைத்திட்டம் 200 நாள் வேலைத்திட்டம் என அரசாங்கம் அறிவித்து அவசர கதியில பிள்ளைகளுக்கு கற்பிக்குமாறு அறிவிப்பார்கள். ஒரு கல்வி ஆண்டு முழுமைக்கும் கற்கவேண்டிய பாடங்களை இவ்வாறு குறுகிய நாட்களில் எவ்வாறு கற்பிப்பது? கற்பது? கொரோனா காலத்திலயும் இப்படித்தான் இருந்தது. இனியும் இப்படித்தான் வரப்போகுது.

இப்படியான நிலையில் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர் தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் முன்னதாக 3 ஆண்டுகள் சீரான கல்வியை முன்னெடுக்காது எவ்வாறு தோற்ற முடியும்? குறிப்பாக உயர்தர மாணவர்கள் வழமையாக ஆறு தவணைகளாக கற்றல் செயற்பாட்டினை மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருந்த பாடத்திட்டங்களை ஒரு மாத்திற்கு ஒரு தவணையாக குறுக்கிய நிலையில் எவ்வாறு கற்பிக்க முடியும்? கற்க முடியும்? ஆசிரியர்களாலும் கற்பிக்க முடியாது. பிள்ளைகளாலும் கற்றுக்கொள்ள முடியாது. இப்படியாக கற்கும் மாணவர்கள் மருத்துவராகவோ, பொறியியலாரராகவோ ஏனைய உயர்நிலைகளுக்கோ எவ்வாறு வரமுடியும்?

இந்த நிலை தொடருமாக இருந்தால் சில வருடங்களில் இதன் தாக்கத்தை உணரவேண்டியிருக்கும். தரமான, முழுமையான கல்விச் செயற்பாடு இவ்வாறு பாதிக்கப்படுவதனால் நிபுணத்துவம் மிக்கவர்களாக மாணவர்களை உருவாக்க முடியாத நிலையேற்பட்டுள்ளது. இதனால் எமது சமூகம் நல்ல நிபுணர்களை இழக்கவேண்டிய நிலையேற்பபட்டுள்ளது.

கேள்வி: இணைய வழிக் கல்வி மாணவர்களை முழுமைப்படுத்துகிறதா…?

பதில்: தற்கால எரிபொருள் நெருக்கடியில் இணைய வழிக் கல்வியை தொடருமாறு கல்வி அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கொரோனா கால முடக்கதின் போதான இணைய வழிக்கல்வியில் இருந்தே இன்னும் மீளமுடியாத நிலையில் தான் பிள்ளைகளின் நிலை இருக்குது. சுமார் 5 சதவீதமான பிள்ளைகள் மட்டும் தான் இந்நிலைகளைக் கடந்து மேல வந்திருக்கினம்.

சூம் இணைப்பின் ஊடாக கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற போது அதில் இணையும் மாணவர்கள் முழுமையாக அக்கறையுடன் செயற்படுவது மிக மிகக் குறைவு. இணைப்பை தொடங்கியதும் அதிலிருந்து விலகி விளையாட்டு உள்ளிட்ட வேறு விடங்களில் அவர்கள் ஈடுபட்டு வரும் நிலை காணப்படுகிறது. அதனைவிட பெரும்பாலான வீடுகளில் ஒரு ஸ்மார்ட் போன் இருக்கும் போது ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருப்பார்களாயின் அவர்களால் இகணைய வழிக் கல்வியில் இணைய முடியாத நிலை காணப்படும். இவ்வாறான சந்தரப்பங்களில் க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர் தரங்களில் பிள்ளைகள் இருப்பின் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கி ஆரம்பக் கல்வி கற்றும் பிள்ளைகளை புறக்கணிக்கும் நிலை காணப்படுகிறது.

WhatsApp Image 2022 07 07 at 9.57.51 PM கல்வித்துறை சந்தித்து நிற்கும் நெருக்கடியானது பொறுப்பில்லாத சமுதாயத்தையே கட்டாயம் உருவாக்கும்! | ஞானகி பவானந்தம் ஆசிரியை, யாழ் வட இந்து ஆரம்ப பாடசாலை.
இது தவிர இணையவழிக் கல்விச் செயற்பாடு என்ற பெயரில் பிள்ளைகள் தனித்து விடப்படும் சூழல் அவர்கள் தவறான விடயங்களில் இணைய செயற்பாடுகளின் ஊடாக ஈடுபடும் நிலையை ஏற்படுத்துகிறது. அவ்வாறான நிலையைத் தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாதவர்களாக பெற்றோர் உள்ளனர். இவ்வாறான நிலையில், எப்போதுதான்ந இந்த இணையவழி கல்விக்கு முடிவு வரும் என பெரும்பாலான பெற்றோர் ஆதங்கப்பட்டுக் கொண்டுள்ளனர்.

இதனைவிட முக்கியான பிரச்சினை எழுத்தறிவற்ற சமூகமாக எமது பிள்ளைகள் உருவாகி வருகின்றமை. ,ணைய வழி கல்வியை தொடரும் மாணவர்கள் பொதுப் பரீட்சைகளுக்கு முகம் கொடுக்கும் போது எழுத்தறிவில் பரிச்சயமற்ற தன்மையினால் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

ஆரம்ப கல்வியை தொடரும் மாணவர்கள் முற்றாகவே எழுத்தறிவற்றவர்களாக வளர்ந்துவரும் நிலையேற்பட்டுள்ளது. ஆரம்ப கல்வி கற்கும் மாணவர்களுக்கு ,ணையவழி கல்வியினால் எவ்வித பயனும் ,ல்லை.

கேள்வி: தற்போதைய நிலைமையை விட அதிகளவான நெருக்கடிகளுக்கு மத்தியிலும் யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் கல்வி செயற்பாடுகள் தடையின்றி மேற்கொள்ள முடிந்தது. அது எவ்வாறு சாத்தியமாகியிருந்தது?

பதில்: யுத்த காலத்தில எப்படி இருந்தனாங்கள், எப்படிப் படிச்சனாங்கள் என்பதை அதிசயமாக பெரும்பாலானவர்கள் நினைவுகூர்வதை தற்போது காணக்கூடியதாக உள்ளது. எந்தவொரு சந்தரப்பத்திலையும் யுத்தகால செயற்பாடுகள் கல்வியில் தாக்கத்தை செலுத்தியிருக்கவில்லை. யுத்தகால செயற்பாடுகளின் போது எந்த தரப்புமே கல்வி செயற்பாடுகளில் தலையிட்டிருக்கவில்லை. கல்விச் செயற்பாடுகளுக்கு முன்னுரிமையளிக்கும் வகையிலான சமூகக் கட்டமைப்பு அப்போது இருந்தது.

இப்போது நாங்கள் சுற்றுநிரூபங்களுக்கு பின்னால் இழுபடும் நிலையே காணப்படுகிறது. நாளை முதல் பாடசாலைகள் ஆரம்பம் என ஒரு சுற்றுநிரூபம் வரும். கொஞ்ச நேரத்தில் என்ன காரணத்திற்காக பாடசாலைகள் இல்லை என்பதாக மற்றொரு சுற்றுநிரூபம் வரும். நிமிடத்துக்கு நிமிடம் சுற்றுநிரூபங்களை எதிர்பார்த்தே செயற்படவேண்டிய நெருக்கடியில் தான் கல்விச் சமூகம் உள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் முதற்கொண்டு ஆசிரியர்கள் வரை ,தனால் பெரும் நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்கும் நிலையேற்பட்டுள்ளது.

ஆனால் யுத்த காலத்தில இவ்வாறன நிலை இருக்கவில்லை. பிள்ளைகளின் கல்வி செயற்பாட்டிலோ கற்பித்தல் செயற்பாட்டிலோ எவ்வித தாக்கமும் ஏற்பட்டிருக்காத நிலையே இருந்தது. அதனால் தான் கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்கவும், முன்னேற்றகரமான நிலையை அடையவும் முடிந்தது.

கேள்வி: இவ்வாறான வெறுமையான சூழலை கடந்து பிள்ளைகளை முன்னேற்றுவதற்கு பெற்றோரின் பங்கு என்ன…?

பதில்: தற்போதைய பிள்ளைகளின் வளர்ப்பு முறைதான் இதற்கு முழுக்க முழுக்க காரணம். முன்னர் யுத்த காலத்தில் எதுவுமேயற்ற சூழலில் அதற்கேற்றவாறு நாங்கள் வாழப்பழகிக் கொண்டோம். அதனால் எந்தப்பெரிய நெருக்கடிகள் ஏற்பட்ட போதிலும் எதிர்கொண்டு முன்னேறும் ஆற்றலும் திறமையும் எம்மிடையே இருந்தது. ஆனால் தற்போது பிள்ளைகளுக்கு நாங்கள் செல்லம் குடுத்து பழுதாக்கிக் கொண்டிருக்கிறம். பிள்ளைகள் ஆசைப்பட்டதை எல்லாம் வாங்கி குடுத்து சொகுசான நிலையில பிள்ளைகளை வளர்த்ததன் காரணமாகத்தான் இன்றைய நெருக்கடி நிலைக்குள் தம்மை ஈடுகொடுத்து முன்னோக்கிச் செல்ல முடியாது முடங்கிப்போகும் நிலைக்கு காரணம்.

மின் தடை ஏற்பட்டால் படிக்கவே முடியாது என்ற மனநிலையில் பிள்ளைகள் இருப்பதற்கு எமது வளர்ப்பு முறைதான பிரதான காரணம். எந்த சூழலையும் எதிர்கொண்டு வாழ்வில் முன்னேறும் வகையில் பிள்ளைகளை வளர்ப்பதன் மூலம்தான்; இவ்வாறான அசாதாரண சூழ்நிலைகளில் இருந்து அவர்கள் தம்மை பாதுகாத்துக் கொள்ள வழிவகுக்கும். கடந்த காலத்தைப் போன்று வசதி-வாய்ப்புகள் இருப்பினும் கஸ்ட-நஷ்டங்களை விளங்கிக் கொள்ளக்கூடியவர்களாக பிள்ளைகளை வளர்ப்பதன் மூலமே எக்காலத்த வளர்த்தெடுக்க முடியும்.

இவ்வாறான நிலையை கடந்து தற்போதைய நிலை தொடருமாயின் வெறுமையான சூழலில் வளரும் ,ன்றைய பிள்ளைகள் வளர்ந்து சமூகத்தை தலைமைதாங்கும் நிலையேற்படும்போது பொறுப்பில்லாத சமுதாயமே கட்டாயம் உருவாகம்.

Leave a Reply