பொருளாதார மீட்சிக்கான பெருமை ரணில் விக்கிரமசிங்கவுக்கு சொந்தமானது: ஹர்ஷ டி சில்வா கருத்து

பொருளாதார மீட்சிக்கான பெருமை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சொந்தமானது. நாட்டு மக்களின் நலன் கருதி அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம். அனைத்தையும் எதிர்க்கும் மனநிலையில் நாங்கள் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (7) நடைபெற்ற 2026 நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுத்த பெருமை முன்னாள் ஜனாதிபதி உட்பட அந்த அரசாங்கத்துக்கே சேரும். அவர்களின்   உழைப்பை இந்த அரசாங்கம் தமக்கு சொந்தமானது என்று குறிப்பிட்டுக் கொண்டு  பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டு விட்டதாக குறிப்பிடுகிறது.

தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் சிறந்த திட்டங்கள் ஏதும் இந்த  வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. மாறாக பல போலியான வாக்குறுதிகள் மாத்திரமே  இம்முறையும் முன்வைக்கப்பட்டுள்ளன.  ஆகவே வரவு செலவுத் திட்டம் பற்றி பெரிதாக குறிப்பிடுவதற்கு ஒன்றுமில்லை.

அரச நிர்வாகம் டிஜிட்டல் மயப்படுத்தல், நிகழ்நிலை கொடுக்கல் வாங்கல் முறைமை பற்றிய முன்மொழிவுகள் வரவேற்கத்தக்கவை. புதிய மாற்றத்தை நோக்கிச் செல்ல வேண்டும். அப்போது தான் டிஜிட்டல் பொருளாதார பயனை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.