பயங்கரவாதத்தடைச்சட்டம் நிராகரிக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்த பல்வேறு அடிப்படைக் கூறுகள், அதற்குப் பதிலீடாகப் புதிதாக வெளியிடப்பட்டுள்ள வரைவில் உள்வாங்கப்பட்டுள்ளன.
ஜனநாயகக் கோட்பாடுகள் வலுவிழப்பதைப் புறந்தள்ளிவிட்டு, தேசிய பாதுகாப்பை மாத்திரம் தனித்து முன்னிலைப்படுத்த முடியாது. எனவே இப்புதியவரைவை அரசாங்கம் உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என சமூக ஊடகப் பிரகடனத்துக்கான கூட்டிணைவு வலியுறுத்தியுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச் சட்டத்துக்குப் பதிலாக பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதனை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பதுடன், அதுபற்றிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு அனுப்பிவைக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்துள்ளார்.
அதற்கமைய நாடளாவிய ரீதியில் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்தும் நோக்கில் சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் இணைந்து உருவாக்கிய சமூக ஊடகப் பிரகடனத்துக்கான கூட்டிணைவு எனும் அமைப்பு இப்புதிய வரைவு தொடர்பான தமது கரிசனைகளை உள்ளடக்கி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது, தற்போது நடைமுறையிலிருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத்துடன் ஒப்பிடுகையில் அடையப்பட்டிருக்கும் மனித உரிமைகள் சார்ந்த பெருவெற்றி போல் காண்பிக்கப்படுகின்றது.
அந்த பிம்பத்தின் விளைவாக நிர்வாக ரீதியான தடுத்துவைப்பு, இராணுவ அதிகாரங்கள், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் சார்ந்த குற்றங்கள் என்பன உள்ளடங்கலாக அவ்வரைவில் உள்வாங்கப்பட்டுள்ள மிகமோசமான அடிப்படைகள் பற்றிய தெளிவற்ற தன்மை நிலவுகின்றது.
பயங்கரவாதத்தடைச்சட்டம் நிராகரிக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்த பல்வேறு அடிப்படைக் கூறுகள் இவ்வரைவில் உள்வாங்கப்பட்டுள்ளன. பயங்கரவாதக்குற்றங்கள் தொடர்பில் குற்றவியல் சட்டத்துடன் அவசியமேற்படும் பட்சத்தில் அவசரகால வழிகாட்டல்களை இணைந்துப் பிரயோகிப்பதை விடுத்து, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் பிரயோகிக்கப்படுமாயின், அது சம்பந்தப்பட்ட நபருக்கான பாதுகாப்பு
தளர்த்தப்பட்ட குற்றவியல் அடிப்படையுடன், பரந்துபட்ட நிறைவேற்றதிகாரப் பிரயோகத்துக்கும் இடமளிக்கும். பரந்துபட்ட அதிகார வழங்கலுக்கு வாய்ப்பளிக்கும் இச்சட்ட வரைவின் அடிப்படை நோக்கம், அதன் பெயரில் உள்ளவாறு பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதே தவிர, வன்முறைகளிலிருந்து சாதாரண மக்களைப் பாதுகாப்பது அல்ல.
ஜனநாயகக் கோட்பாடுகள் வலுவிழப்பதைப் புறந்தள்ளிவிட்டு, தேசிய பாதுகாப்பை மாத்திரம் தனித்து முன்னிலைப்படுத்த முடியாது. எனவே இவ்வரைவை உடன் வாபஸ் பெறுமாறும், சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்புடையவாறு புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்து சகல தரப்பினருடனும் பரந்துபட்ட கலந்துரையாடல்களை முன்னெடுக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



