சர்வதேசத்துக்கு வழங்க வேண்டிய பதிலை, தயாரிக்கும் சட்டமா அதிபர் திணைக்களம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகருக்கு வழங்கவேண்டிய பதிலை, சட்ட மா அதிபர் திணைக்களம் தற்போது தயாரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக் (Volker turk) இலங்கை குறித்த தனது அண்மைய அறிக்கையில், சட்ட மாஅதிபர் அலுவலகத்தை நீதிக்கு ஒரு முக்கிய தடையாக விபரித்துள்ளார்.

அதேநேரத்தில் ஒரு சுயாதீன வழக்கு தொடுநர் அதிகாரத்தின் அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தார்.
இதனையடுத்தே குறித்த கருத்துக்கள் தொடர்பில் வெளியுறவு அமைச்சுடன் கலந்தாலோசித்து பதில் வரைவு செய்யப்பட்டு வருவதாக சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டம்பரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்வில் சமர்ப்பிக்கப்படும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக்கின் அறிக்கையில் அவர் முன்வைக்கும் கருத்துகளுக்கு, இலங்கை அரசாங்கத்தின் பதிலின் ஒரு பகுதியாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கடந்த செவ்வாயன்று, வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, கடுமையான மனித உரிமை மீறல்களைத் தொடர ஒரு சுயாதீன வழக்கு தொடுநர் அதிகாரத்தை உறுதி செய்வதற்காக சட்ட மாஅதிபர் அலுவலகத்திற்குள் சீர்திருத்தம் தேவை என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் தெரிவித்திருந்தார்.

இலங்கையில் சட்ட மாஅதிபருக்கு வழங்கப்பட்டுள்ள வழக்குத் தொடரும் விருப்புரிமை, பொலிஸாரின் வரையறுக்கப்பட்ட புலனாய்வுத் திறன், தகுதிவாய்ந்த தடயவியல் நிபுணர்கள் இல்லாமை மற்றும் தமிழ் பேசும் அதிகாரிகளின் வெற்றிடங்கள் ஆகியவை பாதிக்கப்பட்டவர்கள் நீதியைப் பெறுவதைக் கூட்டாகத் தடுக்கின்றன மற்றும் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கின்றன என்று அவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் அரசாங்கம் தனது கொள்கை அறிக்கையில் சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் இருந்து சுயாதீனமான பொது வழக்குத் தொடரும் பணியகத்தை அறிமுகப்படுத்துவதாக உறுதியளித்துள்ளது என்பதையும் உயர்ஸ்தானிகரின் அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது. ஏற்கனவே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர், இந்த ஆண்டு ஜூன் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்தபோது சட்ட மாஅதிபர் பாரிந்த ரணசிங்கவை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.