அரசியலமைப்பில் உள்ள 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதே சஜித் வழங்கிய உத்தரவாதம் – மனோகணேசன்

அரசியலமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாகவே சஜித் பிரேமதாஸ வாக்குறுதியளித்திருப்பதாக தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் 13 ஆம் திருத்தம்  கிடைக்கப்பெறுவதை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தடுக்கும் பட்சத்தில், எதிர்வருங்காலங்களில் சமஷ்டியோ அல்லது அதற்கும் அப்பால் சென்ற மிகச்சிறந்த தீர்வோ கிடைத்தாலும் கூட அதன்கீழ் வடக்கு, கிழக்கில் வாழ்வதற்கு தமிழர்கள் எஞ்சியிருக்கமாட்டார்கள் என மனோகணேசன் எச்சரித்திருக்கின்றார்.

எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கப்போவதாக அறிவித்திருக்கும் நிலையில், தமிழ் மக்களுக்கான சமஷ்டி தீர்வு குறித்து அவர் வழங்கிய உத்தரவாதம் என்ன என்று தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.

இந்த நிலையில் சிறிதரனின் கேள்விக்குப்  பதிலளித்திருக்கும் மனோகணேசன், இதுபற்றி மேலும் கூறியிருப்பதாவது:

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முடிவுகள் குறித்தோ அல்லது அதன் உள்விவகாரங்கள் குறித்தோ நான் கருத்து வெளியிட விரும்பவில்லை. ஆனால் அரசியலமைப்பில் இருக்கும் 13 ஆவது திருத்தத்தை முழுமையான நடைமுறைப்படுத்துவதாக சஜித் பிரேமதாஸ பல தேர்தல் பிரசார மேடைகளில் பகிரங்கமாக வாக்குறுதியளித்திருக்கின்றார்.

இதுவே அவர் தந்திருக்கும் உத்தரவாதம் ஆகும். அது இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கோ அல்லது ஏதேனும் சில கட்சிகளுக்கோ மாத்திரம் இரகசியமாக வழங்கப்பட்ட உத்தரவாதம் அல்ல. மாறாக வட, கிழக்கில் வாழும் ஈழத்தமிழ் மக்கள் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த தமிழ்பேசும் மக்களுக்கும் பொதுவாக அவர் அளித்திருக்கும் உத்தரவாதமாகும்.

அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தி, தேர்தலை விகிதாசார முறையில் நடாத்தி, வட, கிழக்கில் ஸ்தம்பிதமடைந்திருக்கும் மாகாணசபை முறைமையை மீண்டும் உருவாக்கி, அதிகாரங்களை வட, கிழக்கைச் சேர்ந்த தமிழ் மக்களின் நேரடிப் பிரதிநிதிகளிடமே வழங்கி, அதன்மூலம் அங்கு அரசியல், பொருளாதார, சமூக, கலாசார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதே சஜித் பிரேமதாஸவின் நோக்கமாக இருக்கின்றது.

அதேவேளை சமஷ்டி குறித்தோ அல்லது 13 பிளஸ் குறித்தோ எதுவும் பேசப்படவில்லை என்ற உண்மையை நான் நேர்மையாகக் கூறிவைக்க விரும்புகின்றேன். அரசியலமைப்பில் இருக்கும் 13 ஐப் பெற்று, மாகாணசபை முறைமையின் ஊடாகத் தம்மைப் பலப்படுத்திக்கொண்டு பயணிக்கவேண்டிய கடப்பாடு தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுக்கும், தமிழ் தலைமைகளுக்கும் தான் இருக்கின்றது.

வட, கிழக்கு மக்களுக்கு மீளவும் மாகாணசபைகளைத் தருவதென்பது அம்மக்கள் மீண்டும் மூச்சுவிடுவதற்கு வாய்ப்பளிப்பதாகும். அவ்வாறிருக்கையில் சஜித் பிரேமதாஸ சமஷ்டி குறித்து உத்தரவாதம் அளித்தாரா எனக் கேட்பது பொருத்தமற்றதாகும்.

வட, கிழக்கு மாகாணங்களில் சமஷ்டி அடிப்படையிலான நிர்வாக முறைமை உருவாக்கப்படவேண்டும் என்பதும், இலங்கை ஓர் சமஷ்டி நாடாக மாற்றப்படவேண்டும் என்பதுமே தனிப்பட்ட முறையில் எனது கொள்கையாக இருக்கின்றது. ஆனால் இன்றைய அரசியல் சூழ்நிலையிலே நாம் குறைந்தபட்ச நிலைப்பாடுகளை மேற்கொள்ளவேண்டியிருக்கும் அரசியல் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளவேண்டும்.

ஆகவே அரசியலமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக சஜித் பிரேமதாஸ வழங்கியிருக்கும் உத்தரவாதம் ஏனைய பிரதான வேட்பாளர்கள் அளித்திருக்கும் உத்தரவாதங்களை விட சிறப்பானதாக இருக்கின்றது.

ஈழத்தமிழ் மக்கள் மீது எனக்கு அதிக உரிமை இருப்பதாக நான் கருதுகின்றேன். அந்த உரிமையில் ஒரு விடயத்தைக் கூறவிரும்புகின்றேன். இன்றளவிலே வட, கிழக்கிலே வாழும் தமிழ் மக்களின் சனத்தொகை சடுதியாகக் குறைந்துவருகின்றமை அங்கு நிலவுகின்ற மிகமுக்கிய சவாலாகும். அங்கு வாழும் தமிழ் மக்கள் பலர் கனடா, அவுஸ்திரேலியா போன்ற சர்வதேச நாடுகளை நோக்கிப் புலம்பெயர்ந்து செல்கின்றனர்.

இது சிறிதரன், சுமந்திரன் உள்ளிட்ட சகல தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்கு தெரியும். இருப்பினும் இதுபற்றி அவர்கள் பகிரங்கமாகக் கலந்துரையாடுவதில்லை. எனவே வட, கிழக்கில் மாகாணசபை நிர்வாகத்தை ஏற்படுத்தி, சுமுகமான அரசியல், பொருளாதார, சமூக, கலாசார சூழலைக் கட்டியெழுப்பினால் மாத்திரமே அம்மாகாணங்களில் தமிழர் சனத்தொகை சடுதியாக வீழச்சியடைந்துவருவதைத் தடுக்கமுடியும்.

மாறாக 13 கிடைக்கப்பெறுவதை நாம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தடுத்தோமேயானால், எதிர்வருங்காலங்களில் சமஷ்டியோ அல்லது அதற்கும் அப்பால் சென்ற தீர்வோ கிடைத்தாலும் கூட அதன்கீழ் வட, கிழக்கில் வாழ்வதற்கு தமிழர்கள் எஞ்சியிருக்கமாட்டார்கள். இதனை சிறிதரன் மாத்திரமன்றி சகல தரப்பினரும் புரிந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.