அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் பட்சத்தில், வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளைத்தேடி ஜனநாயக ரீதியில் போராடிவரும் அனைத்துத் தாய்மாரும் சிறையில் அடைக்கப்படுவர். எதிர்வருங்காலங்களில் தமிழ்மக்கள் தமது அடிப்படை உரிமைகள் குறித்துக் கனவிலும்கூட நினைத்துப்பாரக்கமுடியாத நிலைக்குத் தள்ளப்படுவர்.
எனவே பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்கும் அதேவேளை, இப்புதிய சட்டமூலத்தை வாபஸ் பெறுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துங்கள் என்று வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தன் சர்வதேச மன்னிப்புச்சபை உறுப்பினர்களிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
அமெரிக்காவைத் தளமாகக்கொண்டியங்கும் சர்வதேச மன்னிப்புச்சபையின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ‘மனித உரிமைகளுக்கான பேரூந்தில் ஏறுங்கள்’ என்ற மகுடத்தில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதை முன்னிறுத்தி பிரசாரத்தை முன்னெடுத்துவருகின்றனர்.
அந்தவகையில் இவ்வருடம் அப்பிரசாரத்தின் ஓரங்கமாக இலங்கை, எகிப்து, ஹொங்கொங், சீனா, திபெத், ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் நிகழ்நிலை முறைமையிலான கலந்துரையாடலொன்றின் மூலம் ஆராயப்பட்டது.
அக்கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்று, இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் உரையாற்றுகையிலேயே லீலாதேவி ஆனந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.