மட்டக்களப்பு, குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினர், எந்த சந்தர்ப்பத்திலும் நீதிமன்றத்தில் முன்னிலையாகி, முறைப்பாடு செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு, களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, நீதவான் இந்த கட்டளையை பிறப்பித்துள்ளார்.
குருக்கள்மடம் மனிதப் புதைகுழி சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடளிக்க நேற்று (15) மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்த போதும், அதற்கு எவரும் முன்வரவில்லை. கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள், குருக்கள்மடம் மனித புதைகுழியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் காணப்படுவதாக தெரிவித்து இதுவரையில் 35 பேர் நீதிமன்றில் முன்னிலையாகி முறைப்பாட அளித்துள்ளனர்.
இந்தநிலையில் குருக்கள்மடம் மனித புதைகுழி அகழ்விற்கு 2,850,000 ரூபாய் தேவைப்படுவதாக ஏற்கனவே மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. குறித்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதன் பின்னர் மண் பகுப்பாய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகும் குரலற்றவர்கள் இயக்கத்தின் சட்டத்தரணி ராஷி மொஹமட் தெரிவித்தார்.
இந்த நிலையில் குறித்த வழக்கு தொடர்பான அடுத்தக்கட்ட விசாரணையை எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஒத்திவைத்து, களுவாஞ்சிக்குடி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.