ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் : முதல் அமர்விலேயே இலங்கை குறித்த கலந்துரையாடல் !

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை (08) ஆரம்பமாகின்ற நிலையில், இந்த  கூட்டத்தொடர் இன்று முதல் ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இலங்கை அரசாங்கம் சார்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையிலான குழு ஜெனிவாவுக்கு பயணமாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரின் முதல் அமர்விலேயே இலங்கை குறித்த கலந்துரையாடல் இடமபெறவுள்ளது.

இந்த முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக அமைச்சர் விஜித ஹேரத் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது அரச பிரதிநிதிகள் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் உள்ளிட்ட  பல உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோக்கர் டர்க் மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இடையே விசேட சந்திப்பு ஒன்றும் இடம்பெறவுள்ளது.

இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது  கூட்டத்தொடர் இலங்கைக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளதாக இலங்கையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளரான சட்டத்தரணி பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.

இந்த அமர்வில் நாட்டிற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பான வரைவு சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு வெளியுறவு அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் இலங்கைக்கான விஜயத்தின் பின்னர் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ பதில் அறிக்கை மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பதில் அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது,

எந்தவொரு வெளியகபொறிமுறையும் தற்போது தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க முயற்சிகளுக்கு இடையூறாக அமைவதுடன் அவை சமூகங்களை துருவமயப்படுத்தும். எனவே சர்வதேச பொறிமுறைகள் தொடர்பான உயர்ஸ்தானிகரின் பரிந்துரைகளை ஒருபோதும் ஏற்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன, மத, வர்க்க பேதங்களின் அடிப்படையிலான பிளவுகளோ அல்லது ஒடுக்குமுறைகளோ அற்ற, பல்லினத்தன்மையை கொண்டாடக்கூடிய நாட்டை கட்டியொழுப்புவதற்கான அர்ப்பணிப்புடன் கூடிய கடப்பாட்டையும் மக்கள் ஆணையையும் அரசாங்கம் கொண்டிருக்கின்றது. இலங்கையில் இனவாதமோ, தீவிரவாதமோ தலைதூக்குவதற்கு அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காகது. எந்தவொரு வெளியக பொறிமுறைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய முயற்சிகளுக்கு இடையூறாகவே அமையும் என்பதையும் அவை சமூகங்களை துருவமயப்படுத்தும் என்பதையும் அவதானித்துள்ளோம்.

எனவே உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் சர்வதேச நடவடிக்கைகள் தொடர்பில் உள்வாங்கப்பட்டுள்ள முடிவுரையையும் பரிந்துரையையும் இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது.