இலங்கையில் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக கூறப்படும் யானையை மீளப் பெற தாய்லாந்து முயற்சி

2001 ஆம் ஆண்டு தாய்லாந்தினால் இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்ட மூன்று யானைகளில் ஒன்றான சக் சுரினை, மீளப் பெறுவதற்கான வழிகளை தாய்லாந்து அரசாங்கம் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாக அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த யானை, அதனை கையாளுபவர்களால் தவறாக நடத்தப்பட்டதாக விலங்குகள் உரிமைகள் அமைப்பினால் கடந்த ஆண்டு அறிக்கைகள் வந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சக் சுரின் நிலைமையை அறிந்திருந்தாலும், யானையை தாய்லாந்திற்கு கொண்டு செல்வது, அதன் அளவு மற்றும் அதனுடைய காயங்களின் தன்மை காரணமாக சிக்கல் ஏற்பட்டுள்ளன.

தாய்லாந்து சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வள அமைச்சர் வரவுட் சில்பா-ஆர்ச்சா, சாக் சுரினை தமது நாட்டுக்கு கொண்டு வருவதற்கு C-130 போக்குவரத்து விமானத்தைப் பயன்படுத்துவதே ஆரம்பத் திட்டம் என்று விளக்கியுள்ளார் இருப்பினும், ஆயுதங்கள் மற்றும் தாங்கிகள் போன்ற இராணுவ தளவாடங்களை கொண்டு செல்வதற்காக முதலில் வடிவமைக்கப்பட்ட விமானத்தில், யானையை அடைக்க பொருந்தாது என்பது தெளிவாகத் தெரிந்தவுடன் இந்த யோசனை கைவிடப்பட்டது.

இதனையடுத்து, சக் சுரினை மீட்டெடுக்க ஒரு கப்பலை அனுப்பும் திட்டத்தை தாய்லாந்து அரசாங்கம் முன்மொழிந்தது. எனினும் காயப்பட்ட யானைக்கு இரண்டு வார பயணம் மிக நீண்டதாக இருக்கும் என்பதால் இதுவும் பொருத்தமற்றதாகக் கருதப்பட்டது. சக் சுரின் நாடு திரும்புவதற்கு பொருத்தமான தீர்வைக் காண அமைச்சு தற்போது வெளிவிவகார அமைச்சுடன் ஒத்துழைத்து வருவதாக வரவுட் கூறினார்.

2001 ஆம் ஆண்டு தாய்லாந்தினால் இலங்கைக்கு குறித்த யானை பரிசளிக்கப்பட்டதிலிருந்து அதன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அதன் பின்னர், சக் சுரின் பல இடங்களுக்கு கை மாறியுள்ளதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

சமீப காலம் வரை, குறித்த யானை அளுத்கம கந்தே விகாரையில் வசித்து வந்தது. இலங்கையின் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான Rally for Animal Rights and Environment (ரேர்) கூற்றுப்படி, விகாரையில் யானையின் உடல் சங்கிலியால் கட்டுப்படுத்தப்பட்டதால், அதன் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டதாக தெரிவித்தது.

கடந்த ஆண்டு இறுதியில், சக் சுரினை அவசர மருத்துவ சிகிச்சைக்காக தாய்லாந்துக்கு அழைத்து செல்லுமாறு அந்நாட்டு அரசாங்கத்தை அந்த அமைப்பு வலியுறுத்தியது.