ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும், யாழ்ப்பாணம், தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம் இன்று (4) இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.
சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் திஸ்ஸ விகாரையை அகற்றக் கோரியும், காணி உரிமையாளர்களிடம் காணிகளை மீள வழங்குமாறு வலியுறுத்தியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தது.
இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திட்டமிடப்பட்டிருந்த இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட பொலிஸார் போராட்டக்காரர்கள் அமைத்திருந்த கூடாரங்களை அகற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்தும் அங்கு பதற்றம் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட பல அரசியல் கட்சி உறுப்பினர்களும் பொதுமக்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.




