மேற்காசியப் பிராந்தியத்தில் தற்காலிகப் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டமையை இலங்கை அரசாங்கம் வரவேற்றுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறித்தும் அரசாங்கம் தனது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிராந்தியத்தில் நிலவும் அமைதியற்ற சூழலைத் தணிப்பதற்கான ஒரு தீர்க்கமான நடவடிக்கையாக இதனை இலங்கை அரசாங்கம் கருதுகின்றது.
இது குறித்து வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றத்தைத் தணிப்பதற்கும் மக்களின் துயரங்களைக் குறைப்பதற்கும் எடுக்கப்பட்ட குறிப்பிடத்தக்கதொரு நடவடிக்கையாக இதனை அடையாளம் காண்கிறோம். அத்துடன் பிராந்தியத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் நீண்டகால ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சமாதான முன்னெடுப்பு ஊடாக நிரந்தரமான தீர்வை எட்டுவதற்கு முன்வருமாறு அனைத்துத் தரப்பினரையும் நாம் கேட்டுக்கொள்கிறோம்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.



