இராணுவத்தின் அனுசரணையுடன் தையிட்டியில் திஸ்ஸ விகாரை அமைப்பதற்காகப் பலவந்தமாக சுவீகரிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகளைப் பகுதி பகுதியாக விடுவிப்பதாக பிரதேசத்தின் காணி அதிகாரியால் உறுதிமொழிகள் வழங்கப்பட்ட போதிலும், தமது காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் வரை போராட்டத்தை தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதற்கு அப்பிரதேச மக்கள் தீர்மானித்துள்ளனர்.
இப்போராட்டத்துக்கு வடக்கின் பிரதம சங்கநாயக்க தேரரின் ஆசீர்வாதமும் கிடைத்துள்ளது.
திஸ்ஸ ரஜமகா விகாரை அமைக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுடன் 2025 டிசம்பர் மாதம் 31ஆம் திகதியன்று நடத்திய கலந்துரையாடலில் யாழ். மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், காணிகளை ‘பகுதி பகுதியாக’ விடுவிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
“அவர்கள் காணியை விடுவிக்கும் முயற்சிகளுக்கு நாம் தடையாக இருக்கப்போவது இல்லை. அதேநேரம் எங்கள் போராட்டத்தை கைவிடப்போவதும் இல்லை. இதில் 50 பரப்பு உரிமையாளரும் இருக்கின்றார்கள், அரை பரப்பு உரிமையாளரும் இருக்கின்றார்கள், சகல காணியையும் மீட்பதே எமது நோக்கம். முடிவுகள் எட்டப்படும் என்றால் அது சந்தோசம்தான். முடிவுகள் கிடைக்கும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.”
‘ரஜமகா விகாரை’ எனப் பெயர்ப்பலகைகள் நடப்பட்டு இராணுவத்தின் பங்களிப்புடன் காங்கேசன்துறை தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரை உண்மையான திஸ்ஸ விகாரை அல்ல என நயினாதீவு ரஜமகா விகாரையின் விகாராதிபதி மற்றும் வட இலங்கையின் பிரதம சங்கநாயக்க தேரர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
குறித்த விகாரை அமைந்துள்ள காணிக்கு உரிமை கோரும் தமிழ் மக்களை திஸ்ஸ விகாரைக்கு முன்பாக 2026 ஜனவரி 2ஆம் திகதியன்று சந்தித்து உபதேசம் வழங்கிய நயினாதீவு புராண ரஜமகா விகாராதிபதி நவதகல பதுமகித்தி திஸ்ஸ தேரர், விகாரை அமைப்பதற்காகச் சுவீகரிக்கப்பட்டுள்ள காணி முழுமையாக விடுவிக்கப்படும் வரை போராட்டத்தைத் தொடர்வது பொருத்தமானது எனக் குறிப்பிட்டார்.
“இது நான்கு கட்டங்கள், மூன்று கட்டங்கள் என அவர்கள் சொல்வார்கள். ஆனால் முதலாம் கட்டத்தை முடிக்கவே இரண்டு மூன்று ஆண்டுகள் எடுக்கும். முதலாம் கட்டத்தை முடித்தாலும் இது கிடைக்காது. எடுப்பது என்றால் முழு காணியையும் பெற வேண்டும். அதுவரை நீங்கள் போராடுவது நல்லது.”
திஸ்ஸ ரஜமகா விகாரை அமைக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி 2023ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் விகாரைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் மக்கள், 16 தமிழ் குடும்பங்களுக்குச் சொந்தமான சுமார் 8.5 ஏக்கர் காணியை பலவந்தமாகச் சுவீகரித்து இராணுவம் திஸ்ஸ விகாரையை அமைத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்.
“கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரை பின்னோக்கிச் செல்லும் வரலாற்றைக் கொண்ட இந்த விகாரை தேவனம்பிய திஸ்ஸ மன்னனால் கட்டப்பட்டது என வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது” என இராணுவம் தெரிவிக்கிறது.
“காங்கேசன்துறையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திஸ்ஸ விகாரையின் புனரமைக்கப்பட்ட விகாரையின் தூபியை வைக்கும் புண்ணிய உற்சவம்” 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி நடைபெற்றதாக, 2023 ஏப்ரல் 29 ஆம் திகதி இலங்கை இராணுவம் தனது உத்தியோகபூர்வ இணையதளத்தில் குறிப்பிட்டிருந்தது.




