தமிழ்த்தேசியக் கட்டமைப்புகள் புதுப்பிக்கப்படவேண்டும் | மட்டு.நகரான்

181 Views

இலங்கையின் தற்போதைய அரசியல் பொருளாதார நிலைமைகள் என்பது தமிழர்கள் மத்தியிலும் பாரியளவிலான செல்வாக்குச் செலுத்தும் விடயமாகப் பார்க்கப்படுகின்றது. இன்று இலங்கையில் காணப்படும் நெருக்கடியான நிலைமைகள் என்பது தமிழர்களின் நீண்ட கால பிரச்சினையான இனப்பிரச்சினையை மறக்கவைக்கும் நிலையினை உருவாக்கியுள்ளது.

தமிழர்கள் கடந்த 70வருடமாக தமது சுயநிர்ணய உரிமைக்காக போராடிவரும் நிலையில் பல்வேறு இக்கட்டான நிலையிலும் தமிழர்கள் பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியிலும் முன்கொண்டுசென்ற போராட்டம் இன்று வலுவிழக்கச்செய்யப்படும் நிலையில் காணப்படுகின்றது.

குறிப்பாக தமிழர்களின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர், தமிழர்களின் அடுத்த கட்டப் போராட்டத்திற்காக வித்திடப்பட்ட தமிழ் தேசிய அரசியல் சக்திகளின்   செயற்பாடுகள், இன்று தமிழ் மக்கள் மத்தியில் கேள்விக்குறியாக நிற்கும் நிலையினைக் காணமுடிகின்றது.

தமிழர்கள் ஆயுதப்போராட்டம் ஆரம்பித்த காலம் தொடக்கம்  தமிழர்கள் மத்தியில் காணப்பட்ட புல்லுருவிகளின் செயற்பாடுகள்  தமிழர்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டன. அக்காலத்தில் ஆயுதப்போராட்டம் இருந்த காரணத்தினால் இவ்வாறான புல்லுருவிகள் இனங்காணப்பட்டு அழிக்கப்பட்டார்கள், துரத்தப்பட்டார்கள். ஆனால் இன்றைய காலத்தில் அவ்வாறான புல்லுருவிகள் தமிழர்கள் மத்தியில் பலமடையும் வகையிலான செயற்பாடுகளே அதிகளவில் காணப்படுகின்றன.

தமிழர்களின் ஆயுதப்போராட்ட காலத்தில் தமிழர்களின் போராட்டத்தினை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்வதற்காக தேசியத் தலைவரினால் உருவாக்கப்பட்டதே தமிழ் தேசிய கூட்டமைப்பாகும். யுத்தம் மௌனிக்கப்பட்ட காலம் தொடக்கம் அதன் செயற்பாடுகள் என்பது பல்வேறு சந்தேகங்களையும் அதிருப்திகளையும் ஏற்படுத்திவரும் நிலைமையினைக் காணமுடிகின்றது.

குறிப்பாகத் தமிழ் தேசிய கூட்டமைப்பினை ஆரம்பிப்பதற்காக அடித்தளமிட்ட கிழக்கு மாகாணத்தில், இதுவரையில் வேறு தமிழ் தேசியச்சக்திகள் காலூன்றாத நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குத் தொடர்ச்சியான ஆதரவினை கிழக்கு மக்கள் வழங்கிவருகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஆரம்பிப்பதற்காக உழைத்த பலர் அதற்காக தங்களது உயிர்களைத்  தியாகம் செய்துள்ளனர். தமிழ்த் தேசியத்திற்காக அர்ப்பணித்த பலர் அதற்காக தங்களது உயிர்களை தியாகம்செய்துள்ளார்கள். இவ்வாறான தியாகங்கள் செய்து வளர்க்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் மாற்றியமைக்கப்படவேண்டும் என்பது குறித்தான பல்வேறு குரல்கள் கிழக்கிலிருந்து எழுந்துவருகின்றன.

இதுவரையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் போக்கு தொடர்பான விமர்சனங்களை முன்னெடுத்துவந்தவர்கள் இன்று அதன் போக்கினை மாற்றுவதற்கு முன்னெடுக்கவேண்டிய செயற்பாடுகள் குறித்து பல்வேறு தளங்களில் பேசிவருவதை காணமுடிகின்றது. இந்த செயற்பாடுகள் மிக அவசரமாக முன்னெடுக்கப்படவேண்டியவையாகும். தமிழர்களின் போராட்டத்தினை அடுத்த கட்டத்திற்கு முன்கொண்டுசெல்வதற்காக தேசிய தலைவரினால் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கட்சி அழிவடைவதை அனுமதிக்க முடியாது. தமிழ் தேசியத்தின் குரல்களை இல்லாமல்செய்யமுடியாது.இதற்காக தங்களை ஆகுதியாக்கிய வீரமறவர்களின்  தியாகங்களை நாங்கள் அலட்சியம் செய்யமுடியாது.

இவ்வாறான நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கவேண்டிய பணிகள் மற்றும் தமிழ் தேசிய கட்சிகளின் ஒற்றுமை, அவர்களின் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பது குறித்து கிழக்கின் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் கருத்துகளை எம்முடன் பகிர்ந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் கருத்துத் தெரிவிக்கும் போது,

“தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தொடர்ச்சியாக வரலாற்று தவறுகளை முன்னெடுத்துவருகின்றனர். 2015ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து தமிழ் தேசிய கூட்டமைப்பினை சிதைத்து, தமிழ் மக்களை ஏமாற்றிய வரலாறு அனைவருக்கும் தெரியும்.தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருக்கும் ஒரு சிலர் அக்கட்சிக்குள் முடிவுகளை மேற்கொண்டு கட்சியில் உள்ள அனைவரையும் பலிக்கடாவாக்கி தமிழ் மக்கள் மத்தியிலிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பினை அந்நியப்படுத்தும் செயற்பாடுகளை அவர்கள்முன்னெடுத்துவருகின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினை தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்படுத்தும் முயற்சியை உள்ளுக்குள் இருப்பவர்களே முன்னெடுத்துவருகின்றனர். இவ்வாறான சக்திகளை தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றி வெளியில் பிரிந்துநின்று செயற்படும் அனைத்து தமிழ் தேசிய சக்திகளையும் ஒருங்கிணைக்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும்.”
மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் பணிப்பாளர் ஜீவரெத்தினம் தவேஸ்வரன் கருத்துத் தெரிவிக்கும் போது,
“தமிழத்தேசிய பரப்பில் பல உடைவுகள் இருக்கின்றன. ஏற்கனவே மூன்று தமிழ் தேசிய கட்சிகள் தமிழ்தேசிய அரசியல் பரப்பில் தங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றிக்கொண்டு தேர்தல் அரசியலுக்கான கருவிகளாக தமிழ் தேசியத்தினை பயன்படுத்திவருகின்றனர். தமிழ்த்தேசியம் என்பது எல்லா மக்களுக்கு இருப்பதுபோன்று தமிழ் மக்களுக்கும் உள்ள வாழ்வியலாகும். இவ்வாறான நிலையில் இந்த தமிழ் தேசியத்தினை வாக்குவங்கிக்காக மட்டும் பயன்படுத்திக்கொள்வது தமிழ் இளைஞர்கள் மத்தியில் விரக்தியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் தமிழ் மக்கள் தொடர்பில் சிந்திப்பார்களானால் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒற்றுமையுடன் செயற்பாடுவார்கள். தங்களது சுயநலன்களுக்காகத் தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் அடகுவைக்கும் செயற்பாடுகளையே இவர்கள் முன்னெடுத்துவருகின்றனர். தமிழ் தேசிய கட்சிகள் தங்களது சுயலாபங்களை விடுத்து ஒருமித்து செயற்படுவதற்கான சூழலுக்குள் வரவேண்டும். முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலைசெய்யப்பட்டபோது, கதிரைகளைப்பிடித்துக்கொண்டு பாராளுமன்றத்திற்குள் இருந்தவர்களே எமது தலைவர்கள்.

தென்னிலங்கையில் உள்ள சிங்கள இராஜதந்திரிகளின் செயற்பாடுகளுக்கு ஒத்திசைவாக தமிழ் தேசிய அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை காணமுடிகின்றது. தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்பதை இவர்கள் மறந்து சிங்கள அரசாங்கத்தின் பிரதிநிதிகள் போன்று செயற்படுகின்றனர். அதன் காரணமாகவே தமிழ் மக்களின் ஆணையைப்பெறும் இவர்கள் சிங்கள அரசாங்கத்தின் செயற்பாடுளை நிறைவேற்றுபவர்களாகவுள்ளனர். இதற்குக் காரணம் தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகளைக் கண்காணித்து அவர்களுக்கு அழுத்தங்களை வழங்கும் சக்திகள் தமிழ் மக்கள் மத்தியில் இல்லை. இவர்களுக்கு அழுத்தங்களை வழங்கும் மக்கள் கட்டமைப்புகள் உருவாக்கப்படவேண்டும்” என்றார்.

மட்டு ஊடக மையத்தின் செயலரான நிலாந்தன் கூறும் போது,
“கிழக்கு மாகாணத்தினைத் தளமாகக் கொண்டு இயங்கிய ஊடகவியலாளர்களின் முயற்சியினால் அன்று தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆதரவுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. வெறுமனே அரசியல் செயற்பாடுகளை நடாத்துவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்படவில்லை. தமிழ்த்தேசியத்தின் முன்நகர்வுகள் கொள்கைகள், கோட்பாடுகளுடன் முன்நகர்த்தப்படவேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்டது. ஆனால் இன்று இந்த கொள்கை, கோட்பாடுகளை உடைப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயே பலர் காத்திருந்தனர். அவர்களுக்கு இது ஒரு சந்தர்ப்பமாக மாறிவிட்டது.

இன்றைய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீளமைக்கப்படவேண்டும். அதில் உள்ள பலருக்கு ஓய்வு வழங்கப்படவேண்டும். அத்துடன் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும். இன்று ஒரு சிலர் அதற்குள் முடிவெடுக்கும் நிலை காணப்படுகின்றது. அந்த நிலைமை மாற்றப்படவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழமையாகப் முழுமையாகப் புனரமைக்கப்படவேண்டும். இன்று தமிழ்தேசியத்தினை கூறுபோடுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பலர் நுழைந்துள்ளார்கள்.அப்படிப்பட்டவர்கள்  இனங்காணப்பட்டு அவர்கள் அங்கிருந்து அகற்றப்படவேண்டும். தமிழ்த் தேசியச் சக்திகள் ஒருங்கிணைக்கப்படவேண்டும். தமிழத்தேசிய அரசியல் சக்திகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ஒரு கோட்டின் கீழ் செல்வதன் மூலமே எதிர்காலத்தில் தமிழர்களின் உரிமையினை வென்றெடுக்கக்கூடிய ஒருங்கிணைந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கமுடியும்.”

தமிழரின் தனித்துவம், பாரம்பரியம் ஒருங்கிணையப்பெற்ற வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தினையும் தமிழர்களின் பொருளாதார மேம்பாட்டையும் அடைவதற்கு தமிழர்கள் மத்தியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சீரமைக்கப்பட்டு வலுப்படுத்தப்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.  பல விமர்சனங்களிலிருந்தாலும் அதற்குள் விமர்சனத்திற்குள்ளானவர்கள் துரத்தப்பட்டு மீளமைக்கப்படவேண்டும்.  அதற்கு மிக முக்கியமாக வடகிழக்கு இணைந்த மக்கள் அமைப்பு கட்டியெழுப்பப்படவேண்டும். நாங்கள் இந்த கோரிக்கையினை தொடர்ச்சியாக முன்வைத்துவருகின்ற போதிலும் இதுவரையில் வடகிழக்கில் அது தொடர்பில் யாரும் சிந்தித்ததாக தெரியவில்லை.

Leave a Reply