தமிழ் பேசும் கட்சிகளின் பொது தீர்மானம் டிசெம்பர் 21 இல் கைச்சாத்தாகும்

534 Views

தமிழ் பேசும் கட்சிகளின்தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் எதிர்வரும் 21ஆம் திகதி மீண்டும் கொழும்பில் சந்தித்து பேசுவதென முடிவெடுத்துள்ளன. அன்றைய தினமே, கூட்டு தீர்மானமொன்றில் கையெழுத்திடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஒழுங்கமைப்பில் தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், முதன்முறையாக நவம்பர் 6ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடியிருந்தனர். அதன் தொடர்ச்சியாக கொழும்பில் நேற்று இடம்பெற்ற இரண்டாம் கட்டச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் கலந்துகொண்டிருந்தார்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் முழுமையாக நிறைவேறும் வரை – சமஷ்டி அடிப்படையிலான அதிகார பரவலாக்கல் அமுலாகும்வரை- அதன் முதல் படியாக, ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட வலுவான உடன்படிக்கையான இந்திய – இலங்கை உடன்படிக்கையில் வாக்களித்ததன்படி, 13, 16வது திருத்தங்களை முழுமையாக அமுல்ப்படுத்த வேண்டும், அடுத்த படிமுறையாக சமஷ்டி அடிப்படையிலான நிரந்தர அரசியல் தீர்வு முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டுமென இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தை கோருவதே இந்த கூட்டு முயற்சியின் நோக்கமென தெரிவிக்கப்படுகிறது.

21 ஆம் திகதி கூட்டறிக்கை வெளியிடப்படவுள்ளது. இதில் தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள் கைச்சாத்திடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

விசேடமாக, அனைத்து தமிழ் தரப்பும் ஒன்றுபட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் இந்த கோரிக்கையை முன்வைப்பதென்றும், இதற்காக தமிழக முதல்வர் மற்றும் இந்திய பிரதமரை சந்திப்பதென்றும் திட்டமிட்டு, இந்த கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

பம்பலப்பிட்டி, குளோபல் டவர் ஹோட்டலில் நடந்த நேற்றைய கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், புளொட்டை பிரதிநிதித்துவப்படுத்தி ஆர்.இராகவன், ஈ.பி.ஆர்.எல்.எவ் ஐ பிரதிநிதித்துவப்படுத்தி க.சர்வேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply