சிங்கள கட்சிகளின் முயற்சியை தடுக்க தமிழ் கட்சிகளின் ஒன்றிணைய சித்தார்த்தன் வலியுறுத்தல்

அண்மைய காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் தமிழ்த்தேசியத் தரப்புக்கள் மத்தியில் ஏற்பட்ட பிளவுகளால் சிங்கள அரசியல் கட்சிகள் வட, கிழக்கு மாகாணங்களில் காலூன்றியதாக ஜனநாயகத்  தமிழ்த் தேசியக் கூட்டணியின் உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

எனவே எதிர்வருங்காலங்களில் தமிழ்த்தரப்புக்கள் பிளவுகளின்றி ஒற்றுமையுடன் முன்நோக்கிப் பயணிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். நீண்டகாலம் நடாத்தப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்பட்டவரும் மாகாணசபைத் தேர்தல்கள் விரைவில் நடாத்தப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், அதற்குரிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் நோக்கிலும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாகாணசபைத் தேர்தல்களை உடனடியாக நடாத்துவதற்குரிய அழுத்தங்களைப் பிரயோகிப்பதுடன் அத்தேர்தலை இலக்காகக்கொண்டு தமிழ்த்தரப்புக்கள் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் பயணிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

அதனையடுத்து யாழ்ப்பாணத்தில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் ஊடக சந்திப்பொன்றை நடாத்திய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ‘ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி பதவிகளைக் கைப்பற்றுவதற்காக எமது உதவிகளைப் பெற்றுவிட்டு, அவ்வேளையில் செய்த ஒப்பந்தங்களை மீறுகின்ற வகையில் இப்போது அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தம் தொடர்பில் கூட்டங்களை நடாத்துவதை தாமாகவே ஒப்பந்தத்தில் இருந்து விலகும் செயலாகவே நாம் கருதுகின்றோம்’ என அறிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களின் போது புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டு, தமிழ்த்தேசியப்பேரவை எனும் பொதுப்பெயரில் கஜேந்திரகுமார் தரப்புடன் நிறுவப்பட்ட கூட்டணியில் தற்போது ஏற்பட்டிருக்கும் பிளவு குறித்து வினவியபோதே தர்மலிங்கம் சித்தார்த்தன் இவ்வாறு தெரிவித்தார்.

ஒரு கூட்டணிக்குள் அங்கம் வகிக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகளின் மத்தியில் அவ்வப்போது மாறுபட்ட கருத்துக்களும், நிலைப்பாடுகளும் நிலவும் எனச் சுட்டிக்காட்டிய அவர், இருப்பினும் அவற்றுக்கு அப்பால் தற்போதைய சூழ்நிலையில் சகல தமிழ்த்தேசிய தரப்புக்களும் ஒன்றிணைந்து பயணிக்கவேண்டியது மிகவும் அவசியம் என வலியுறுத்தினார்.

எனவே எதிர்வரும் தேர்தல்களில் வெளியகத்தரப்புகளுக்கு சாதக வாய்ப்பை வழங்கக்கூடிய இவ்வாறான பிளவுகளைத் தவிர்த்து, தமிழ்த்தேசியத் தரப்புக்கள் ஒற்றுமையுடன் பயணிக்கவேண்டியது அவசியமாகும் என்றும் ஜனநாயகத்  தமிழ்த் தேசியக் கூட்டணியின் உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.