2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாவது வாசிப்பு 118 மேலதிக வாக்குகளால் நேற்று (14) பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் கிடைக்கப் பெற்ற அதேவேளை 8 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அந்த கட்சியின் உறுப்பினர்கள் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தனர். பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவும் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தார். அத்துடன் தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தனர்.
இதன்படி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டவர்கள் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தனர். எனினும் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம், வேலுசாமி இராதாகிருஸ்ணன் உள்ளிட்டவர்கள் வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தனர்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பை கருத்திற் கொண்டு அவர்கள் ஆதரவாக வாக்களிப்பதாக குறிப்பிட்டனர். மேலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்தார்.
இதனிடையே இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
இதன்படி, சிவஞானம் சிறிதரன், இராசமாணிக்கம் சாணக்கியன், கவீந்திரன் கோடீஸ்வரன், ஞானமுத்து ஸ்ரீநேசன், சண்முகம் குகதாசன், துரைராசா ரவிகரன், இளையதம்பி சிறிநாத், பத்மநாதன் சத்தியலிங்கம் உள்ளிட்டவர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.



