மாகாணசபைத் தேர்தலில் கூட்டு பயணம் குறித்து தமிழ்க் கட்சிகள் ஆராய்வு…

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தமிழ்க் கட்சிகள் ஒற்றுமையாகப் போட்டியிட்டு எவ்வாறு வட மாகாணத்தைக் கைப்பற்றுவது என்பது தொடர்பிலான சந்திப்பொன்று யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜாப்பெருமாள் தலைமையில் இந்தக் தமிழ்க் கட்சிகளின் கூட்டம் இடம்பெற்றது.

இதில் சுரேஷ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், முருகேசு சந்திரகுமார், வேந்தன் உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் கலந்துகொள்ள அதன் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அவர் சுகயீனம் காரணமாக வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அவரும் வரவில்லை எனக் கூறப்பட்டது.