தமிழ்தேசியத்தின் பால் செயற்படும் அனைத்து தமிழ் கட்சிகளையும் இணைத்து செயற்படுத்துவதை விரும்புகின்றோம் என்றும் இதற்காக ஏற்கனவே இணைந்து செயற்படும் கட்சிகளுடன் கலந்துரையாடி வருகின்றோம் என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
அவ்வாறே தற்போது அடுத்தகட்டத்தை நோக்கி செல்வதற்காக சந்திப்புகள் இடம்பெற்றுவருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை தமிழரசு கட்சிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பு மற்றும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற தேர்தலுக்கு அப்பால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், மாற்றுக்கட்சிகளை ஆதரித்தவர்களின் மனவெளிப்பாடுகள் தொடர்பாக மக்கள் அதிர்ப்தியடைந்துள்ளதை அறிந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறான சூழலில் அடுத்தகட்ட நகர்வுகளை மக்களின் தேவைகளை நிறைவேற்றிகொள்வதற்கு முதலில் தமிழ் தரப்பு ஒன்றிணைய வேண்டும்.
குறிப்பாக தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இருக்கின்ற தமிழ்தேசிய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்ற மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் பொறுப்பு எங்களிடம் உள்ளது. அந்தவகையிலேயே சந்திப்புகளில் ஈடுபடுகின்றோம் என்று தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
சந்திப்புகளின் போதும் ஒன்றிணைந்து செயற்படுவதையும், வடக்கு மாகாணசபை தேர்தல், அரசியலமைப்பு தொடர்பாகவும் பேசி வருகின்றோம். அடுத்த கட்டமாக தமிழ்தேசிய கட்சிகளை ஒன்றிணைந்து ஒரே குடையாக செயற்பட வேண்டும் என்ற நிலையை உருவாக்கவேண்டும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம் என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.



