வடக்கின் கடல் வளங்களை சிதைக்கும் தமிழக இழுவைப் படகுகள் – அகிலன்

வடக்கின் கடல் வளங்களை சிதைக்கும் தமிழக இழுவைப் படகுகள் - அகிலன்எல்லை தாண்டும் மீனவா் பிரச்சினை ஈழத் தமிழா்களுக்கும், தமிழக மக்களுக்கும் இடையிலான உறவுகளில் ஒரு நெருடலை நீண்ட காலமாகவே ஏற்படுத்தியிருக்கின்ற போதிலும், கடந்த வாரத்தில் இது ஒரு உச்சத்தையடைந்திருக்கின்றது. இந்தப் பிரச்சினைக்கு தீா்வே இல்லையா என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கின்றது.

இரு நாட்டு யாத்திரிகள்களும் வருடாந்தம் கலந்து பேசும் கச்சதீவு உற்சவத்தை தமிழக மக்கள் இம்முறை புறக்கணித்தாா்கள். இந்தப் பிரச்சினைக்குத் தீா்வொன்றைத் தரமுடியாது தத்தளிக்கும் இலங்கையின் கடற்றொழில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்தா தான் பதவியைத் துறக்கப்போவதாக அறிவித்தாா். இலங்கை மீனவா்கள் நடுக்கடலில் கறுப்புக்கொடிப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப்போவதாக அறிவித்திருக்கின்றாா்கள்.

இந்திய மத்திய அரசும், தமிழ்நாட்டு அரசும் இந்திய இலங்கை மீனவர்களுக்கிடையில் இருக்கும் முரண்பாட்டினைத் தீர்த்துவைக்க எந்த முயற்சியையும் முன்னெடுக்கவில்லை. அதேவேளையில், இலங்கை அரசாங்கம் தமது கடற்சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தினாலே இந்தப் பிரச்சினை பெருமளவுக்குத் தீா்க்கப்பட்டிருக்கும். ஆனால், இரு நாட்டு மீனவா்களையும் மோதவிட்டு அவா்கள் குளிா்காய்கின்றாா்கள். இதனால் முழுக்க முழுக்க பாதிக்கப்படுவது வடபகுதி மீனவா்கள்தான்.

1921ஆம் ஆண்டு இந்திய இலங்கை பிரிட்டிஷினால் செய்துகொள்ளப்பட்ட மீன்பிடி ஒப்பந்தத்தின்படி இந்திய மீனவர்களுக்குப் பாக்கு நீரிணையில் அதிக கடல்பகுதியும், இலங்கை மீனவர்களுக்குக் குறைவான கடல் பகுதியும் பிரிக்கப்பட்டது. அதில் கச்சத்தீவு உள்ளிட்ட 28 கடல் மைல் பகுதிகள் இந்தியாவுக்கும் நெடுந்தீவு உள்ளிட்ட 12 கடல் மைல் கடல் பகுதிகள் இலங்கைக்கும் என பிரிக்கப்பட்டன. ஆனால், பின்னா் 1974இல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் காரணமாக கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது.

அதனால் இந்திய மீனவர்கள் பயன்படுத்தி வந்த 500 சதுர கி.மீ. கடல் இலங்கை வசமாகியது. இதனால், தமது பாரம்பரிய மீன்பிடி பகுதிகள் பறிபோனதாக இந்திய மீனவர்கள் கருதுகிறார்கள். ஆனால், 1974 கச்சத்தீவு ஒப்பந்தத்தின் 6ஆம் சரத்துப்படி இந்த 500 சதுர கி.மீ. பரப்பளவில் இரு நாட்டு மீனவர்களும் மீன்பிடிக்க உரிமையுள்ளது. ஆனால், அதனையும் மீறி இந்திய மீனவா்கள் வருவது மட்டும் பிரச்சினையல்ல, அவா்கள் பயன்படுத்தும் வலைகள்தான் பிரச்சினை.

பாக்கு நீரிணைப் பகுதியில் இழுவைப் படகுகளைப் பயன்படுத்துவதும் இழுவை வலைகளைப் பயன்படுத்தி இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதனாலேயுமே பிரச்சினைகள் எழுகின்றன. இந்திய மீனவர்கள் இழுவை வலையைப் பயன்படுத்தக் கூடாது என்பது இலங்கை மீனவர்களின் கோரிக்கை. இந்த நடைமுறையைக் கைக்கொள்ள முடியாமையினால் ஏற்படும் பிரச்சினை பல தசாப்தங்களாகத் தொடர்கின்றன. இழுவைப்படகுகளின் செயற்பாட்டினால், இலங்கைக் கடற்பரப்பிலுள்ள மீனும் பிற வளங்களும் அழிகின்றன. இழுவை வலைகள் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளன.

ஆனால், இந்திய மீனவா்கள் இழுவை வலைகளுடன் வடபகுதிக் கரை வரையில் வருவதால், இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இவ்வாறான சூறையாடலுக்கு இந்திய அரசாங்கத்தின் ஆதரவும் இருக்கிறது என்பதே இலங்கை மீனவர்களது கருத்து. அதற்கு இலங்கைக் கடற்பரப்பில் கைது செய்யப்படும் தமது மீனவர்களது விடுதலை தொடர்பில் கொடுக்கப்படும் அழுத்தம் உதாரணமாகக் காட்டப்படுகிறது. யுத்த காலங்களிலும் இப்பிரச்சினை இருந்திருந்தாலும் அது மிகவும் குறைவாகவே இருந்தது. யுத்தம் முடிவடைந்த பின்னர் அதிகரித்திருப்பதாகவே உணரப்படுகிறது.

இலங்கை அரசாங்கமானது இப்பிரச்சினையைப் பூதாகாரமாக்குவதற்கு இலங்கைத் தமிழர்கள் தமிழக மீனவர்களுடனும், இந்தியாவுடனும் முரண்படும் நிலை அல்லது முறுகல் நிலை ஏற்படுவதற்காக இருக்கலாம் என்ற சந்தேகம் காணப்படுகிறது. அதேநேரத்தில், இந்தியா ஆதிக்க மனோநிலையிலேயே செயற்படுகிறது என்பதும் வெளிப்படையாகத் தெரிகின்றது.

இலங்கையர்கள் மாத்திரமன்றி, இந்தியப் பக்தர்களும் இணைந்து வருடம்தோறும் வெகு விமர்சையாக கொண்டாடும் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இவ்வருடம் இந்தியர்களில்லாது நடைபெற்று முடிந்திருக்கிறது. திருவிழாவிற்கு இலங்கையில் இருந்து 4,454 பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்தியப் பக்தர்கள் மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி எவரும் வருகை தரவில்லை. பக்தர்களின் நலன் கருதி சுகாதார வசதிகள் போக்குவரத்து ஒழுங்குகள், உணவு வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இத்திருவிழாவுக்கு அரசியல் சாயம் பூசப்படாது, ஆன்மீக நலன்களை மேவும் புனிதமான திருவிழாவாக நடைபெறவேண்டுமென்பதே கத்தோலிக்க மக்களின் வேண்டுகோளாகும் என்று திருவிழாவை இந்தியர்கள் பகிஷ்கரிக்கக்கூடாது எனவும் கருத்துக்கள், வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, தீர்க்கப்படாமல் இழுபட்டுச் செல்லும் இரு நாட்டு மீனவர் பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வு ஏற்படவேண்டும். ஆனால், இது குறித்து பல சுற்றுப்பேச்சுக்கள் இடம்பெற்ற போதிலும் அனை அனைத்தும் தோல்வியில்தான் முடிவடைந்தன.

3 6 1 வடக்கின் கடல் வளங்களை சிதைக்கும் தமிழக இழுவைப் படகுகள் - அகிலன்இழுவை மடிகளைக் கொண்ட ரோலர் படகுகள் கடல் வளத்தை நாசப்படுத்திக் கொண்டிருப்பதனை அனுமதிக்க முடியாது. சாதாரண நாட்கூலிகளான மீனவர்கள் ரோலர் படகுகளின் சொந்தக்காரா்களான முதலாளிகளின் பிடிகளுக்குள் அகப்பட்டு இதனைச் செய்வதாகச் சொல்லப்படுகின்றது. கடல் சட்டத்தையும், இழுவை மடி வலைகளுக்கு இலங்கையில் உள்ள தடையையும் கண்டிப்பாக இலங்கை கடற்படை நடைமுறைப்படுத்தினால், இதனைத் தடுக்க முடியும். அதேவேளையில், இலங்கைக் கரை வரையில் வந்து இழுவை படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பது தமது உரிமை என்பது போல தமிழக மீனவா்கள் செயற்படுகின்றாா்கள். இதனைக் கேள்விக்குட்படுத்த முடியாது என்பது போலவும் தமிழக அரசியல்வாதிகள் பேசுகின்றாா்கள்.

இந்திய இழுவை படகுகளுக்கு எதிரான கறுப்புக் கொடி போராட்டம் ஒன்றினை இந்தியஇலங்கை கடல் எல்லையில் நடத்துவதற்கு யாழ்ப்பாண மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புகளின் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தொழில் முதல்களை அழித்து வந்தவேளை, இலங்கை கடற்படையினரால் அந்த இந்திய இழுவைப்படகுகள் கைப்பற்றப்பட்டு அதில் பயணித்த கடற்றொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். பெரும்பாலானவா்கள் இந்திய அழுத்தம் காரணமாக விடுவிக்கப்படுகின்றாா்கள். இப்போது இந்திய அரசாங்கம், அந்த கடற்றொழிலாளர்களை விடுதலை செய்யுமாறு இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.

கைது செய்த மீனவர்களுக்குத் தக்க தண்டனையைக் கொடுக்க வேண்டும் எக்காரணம் கொண்டும் அவர்களிடம் மண்டியிடக் கூடாது” என்ற பிடிவாதத்துடன் இருக்கின்ற இலங்கை மீனவர்களுக்கு அரசாங்கங்கள் எவ்வாறான முடிவைக் கொடுக்கப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்திய இழுவைப் படகுகள் பல சூழலியல் பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளன. மீன்களின் பெருக்கமும் வளர்ச்சியும் இப் படகுகளின் செயலால் ஏற்படுகின்றன. இழுவைப் படகு மீன்பிடி என்பது, கடலின் அடிவரை உள்ள அனைத்தையும் வாரி அள்ளி எடுப்பதாகும். இந்த மீன்பிடி முறையில், வலையை வீசி, கடலின் அடி வரையுள்ள அனைத்தையும் அள்ளுவதால், மீன்களின் வகை, வளர்ச்சி கருத்தில் கொள்ளப்படுவதில்லை. கடலடித் தாவரங்கள் அழிகின்றன. இதனால், கடலடி உயிரியல் சமநிலையைப் பாதிக்கப்படுகிறது.

கடல் வாழ் உயிரினங்கள், கடலடித்தள உயிரியல் நிலைப்புக்கு வேண்டிய நுண்ணுயிரிகளும் உயிரினங்கள், கடலடி பவளப்பாறைகளும் முருகைக் கற்களும் அழிகின்றன. மீன்களின் முட்டைகளும் குஞ்சுகளும் அழிவதனால், மீன்களின் இனப்பெருக்கம் தடுக்கப்படுவதுடன், நீண்டகாலத்தில் மீனிருப்புக்குப் பாதிப்பு என பல சூழலியல் பிரச்சினைகளுக்குக் காரணமாக இருக்கின்றது.

வருடத்திற்கு ஒரு தடவை நடைபெறும் கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவுக்கு இந்தியப் பக்தர்கள் வருகை தரா, இந்தியப் பக்தர்களில்லாத திருவிழா நடைபெறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தமிழக அரசும் பல வழிகளிலும் இந்திய மீனவர்களது பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மத்திய அரசைக் கோரிவிட்டது ஏன் அப்பிரச்சினை தீர்க்கப்படாமலேயே தொடர்கிறது என்பது புரியாத புதிரே.

இந்திய மத்திய அரசாங்கமானது வருடத்தில் குறிப்பிட்டளவான நாட்கள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிக்குமாறு கோருகிறதே தவிர, இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளையோ, இழுவைப் படகுகளால் ஏற்படும் சூழலியல் நீண்ட காலப் பிரச்சினையையோ கவனத்தில் எடுப்பதாக இல்லை. இவ்வாறான நிலையில் எல்லை தாண்டும் இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு கிடைக்கும்?