இலங்கை தமிழரசுக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனை தமது புதிய பாராளுமன்ற குழுத் தலைவராக நியமித்துள்ளது.
இது தொடர்பான கடிதம் தமிழரசு கட்சியின் தலைமையிடமிருந்து பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது குறித்து கட்சியின் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்று கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமையிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்சியின் கொள்கைக்கு மாறாக செயற்பட்டதாக தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை அரசியலமைப்பு பேரவையிலிருந்து விலகுமாறு இலங்கை தமிழரசு கட்சி அறிவுறுத்தல் விடுத்திருந்தது.
அரசியலமைப்பு சபையிலிருந்து விலக மறுத்த சிறீதரனின் முடிவைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மூத்த இராணுவ அதிகாரிகளுக்கு அவர் ஆதரவளித்தது, கட்சியின் நீண்டகால நிலைப்பாடுகளுக்கும் தமிழ் வாக்காளர்களின் உணர்வுகளுக்கும் முரணானது என இலங்கை தமிழரசு கட்சியின் தலைமை தெரிவித்துள்ளது
எனினும் இந்த முடிவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இதுவரை உத்தியோகபூர்வமாக பதில் எதையும் வழங்கவில்லை.



