தமிழக மீனவர்கள் வடக்கு கடலில் சட்ட விரோத மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சினையாகவுள்ளது.
கடற்படையினர் என்ற ரீதியில் இந்த பிரச்சினை தொடர்பில் எடுக்கப்படக் கூடிய சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்ற போதிலும், இந்த பிரச்சினைக்கு அரசியல் ரீதியான இராஜதந்திர தீர்வொன்று காணப்பட வேண்டும் என கடற்படை வலியுறுத்தியுள்ளது. கடந்த சகல அரசாங்கங்களிடமும் இது வலியுறுத்தப்பட்டுள்ளதாக கடற்படை அதிகாரிகள் பிரதானி ரியர் அத்மிரல் டேர்டமியன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
கொழும்பு கோட்டையிலுள்ள கலங்கரை விளக்கம் உணவக வளாகத்தில் நேற்று திங்கட்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழக மீனவர்கள் வடக்கு கடலில் சட்ட விரோத மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது எமது வாழ்நாள் முழுவதும் எதிர்கொள்ளும் பிரச்சினையாகவுள்ளது. கடற்படையினர் என்ற ரீதியில் இந்த பிரச்சினை தொடர்பில் எடுக்கப்படக் கூடிய சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருக்கின்றோம்.
இது தொடர்பான தரவுகளையும் நாம் அவ்வப்போது ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கின்றோம். எவ்வாறிருப்பினும் இந்த பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வொன்று காணப்பட வேண்டும் என்பதை கடந்த சகல அரசாங்கங்களிடம் நாம் வலியுறுத்தியிருக்கின்றோம்.
இந்திய கடற்படை மற்றும் இந்திய கரையோர பாதுகாப்பு படையுடன் எமது நட்புறவு தொடர்ந்தும் சுமூகமாகப் பேணப்படுகிறது. இது குறித்த புதிய வழிமுறைகளை நாம் அரசாங்கத்திடம் யோசனைகளாக முன்வைத்திருக்கின்றோம். அதற்கமைய வடக்கு மீனவ சமூகங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த பிரச்சினை காலி கலந்துரையாடலில் முக்கிய விடயமாகப் பேசப்படும். நாமும் அதில் அவதானமாக இருக்கின்றோம்.
அத்தோடு எமது கடற்பரப்பின் ஊடாக இடம்பெறும் போதைப்பொருள் உள்ளிட்ட ஏனைய சட்ட விரோத பொருட்கள் கடத்தல் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளன. சகல நாடுகளுடனும் இணைந்து கடல் வழியூடான போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எவ்வாறிருப்பினும் நூறு சதவீதம் அவை கட்டுப்படுத்தப்படவில்லை. எவ்வாறிருப்பினும் சட்ட ரீதியாக புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.
இது தொடர்பில் வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அத்மிரல் புத்திக லியனகமகே தெரிவிக்கையில்,
வடக்கு கடற்பகுதியே இதனால் அதிகளவில் பாதிக்கப்படுகிறது. எவ்வாறிருப்பினும் அண்மைக்காலமாக இலங்கை கடற்படை மற்றும் அரசாங்கத்தின் செய்தி அவர்களை சரியாக சென்றடைந்திருக்கிறது என்று நம்புகின்றோம். கடந்த 3 வாரங்களாக இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசிக்கவில்லை. எமது கடற்படை படகுகளை அணுப்பி நாம் இந்த எல்லையிலிருக்கின்றோம் என்பதை அவர்களுக்கு காண்பிக்கின்றோம்.
உள்ளக மீனவர்களும் பெருமளவில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்திய மீன்பிடிப் படகுகளை விட எமது மீன் பிடிப்படகுகளின் எண்ணிக்கை அதிகமாகும். தமிழக மீனவர்கள் எமது கடல் எல்லைக்குள் பிரவேசிக்கும் சந்தர்ப்பம் குறைவடைந்துள்ளமைக்கு இதுவும் ஒரு பிரதான காரணியாகும். கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் சற்று குறைவடைந்துள்ளன என்றார்.