“தலைமைத்துவ இடைவெளியை நிரப்ப தயார்” என்கிறது தமிழர் விடுதலைக் கூட்டணி

01. சுயநலம் மேலோங்கியுள்ள தமிழ்க் கட்சிகள் தங்களது கடமைகளில் இருந்து தவறிவிட்டதாகவும், அந்தத் தலைமைத்துவ இடைவெளியைத் தமிழர் விடுதலைக் கூட்டணி நிச்சயம் நிரப்பும் என்றும் அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளரும் தேசிய ஒருங்கிணைப்பாளருமான சுதாகரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“புதிய நிர்வாகிகளின் கீழ் தமிழ் மக்களுக்கான முறையான தலைமையை வழங்கும் நோக்குடன் தமிழர் விடுதலைக் கூட்டணி தற்போது சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றது.

கடந்த காலங்களில் சில பின்னடைவுகளைச் சந்தித்திருந்த போதிலும், தற்போது இளைஞர்களின் பங்களிப்புடன் புதிய உத்வேகத்துடன் முன்னிலையான அரசியல் பாதையை நோக்கி நகர்ந்து வருகின்றோம்” என்று அவர் கூறியுள்ளார்.

தற்போது தமிழ் மக்கள் முறையான தலைமைத்துவம் இன்றி இக்கட்டான நிலையில் வாழ்கின்றனர்.
எந்தவொரு தமிழ்க் கட்சியும் மக்களின் விடுதலைக்கான சரியான பாதையைத் தெரிவு செய்யவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்ச்சியாகப் பிழையான பாதையிலேயே அக்கட்சிகள் பயணிக்கின்றன. கட்சிகளுக்குள் பொதுநலன் மறைந்து சுயநலம் குடிகொண்டுள்ளது என்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும் தேசிய ஒருங்கிணைப்பாளருமான சுதாகரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்க் கட்சிகளுக்குப் போதிய சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டு விட்டன. 2009 யுத்தம் முடிவடைந்த பின்னரும் கூட நீண்ட காலமாக வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால், அவர்கள் தங்களது கடமைகளைச் சரியாக நிறைவேற்றவில்லை என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும் தேசிய ஒருங்கிணைப்பாளருமான சுதாகரன் தெரிவித்துள்ளார்.