இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் திருகோணமலை மாவட்டத்தில் இணைந்து வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளன.
எனினும், அம்பாறையில் சங்குச் சின்னத்தில் இணைந்து போட்டியிடுவதற்கு தமிழ் அரசுக்கட்சி மறுதலித்தமையால் இருதரப்பினரும் தனித்தனியாக களமிறங்குவதற்கு முடிவெடுத்துள்ளன.
திருகோணமலையிலும், அம்பாறையிலும் தலா ஒவ்வொரு தமிழ் பிரதிநிதித்துவத்தினையே பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலையில், திருமலை மறைமாவட்ட ஆயர் மற்றும் ஆர்வலர்கள் இணைந்து தமிழ் அரசுக்கட்சியையும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியையும் இணைத்து களமிறங்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
அதனடிப்படையில், திருகோணமலையில் இருதரப்பினரும் இணைந்து களமிறங்குவதற்கு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. அதன் பிரகாரம், திருகோணமலையில் நான்கு ஆசனங்களுக்காக ஏழுவர் களமிறங்கவுள்ள நிலையில் நான்கு வேட்பாளர்கள் தமிழ் அரசுக்கட்சியின் சார்பிலும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் மூன்று வேட்பாளர்களும் களமிறங்கவுள்ளனர்.
அம்பாறையைப் பொறுத்தவரையில், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் மாவை.சோனாதிராஜா, சிவஞானம் சிறிதரன், வைத்தியர் சத்தியலிங்கம் ஆகியோருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் சங்கு சின்னத்தில் போட்டியிடுவதாகவும், தமிழ் அரசுக்கட்சியின் வேட்பாளர்கள் அச்சின்னத்தின் கீழ் உள்வாங்கப்படுவதாகவும் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது.
எனினும், தற்போது வடக்கு,கிழக்கின் ஐந்து தேர்தல் மாவட்டத்திலும் தமிழ் அரசுக்கட்சி வீட்டுச் சின்னத்தில் களமிறங்கும் என்று சுமந்திரன் அறிவித்திருந்தார்.
அதன் பின்னர் நடைபெற்ற பேச்சுக்களில் அம்பாறையிலும் வீட்டுச்சின்னத்திலேயே களமிறங்குவதில் உறுதியாக இருந்துள்ளது. இதனால் அம்பாறை மாவட்டத்தில் இருதரப்பினருக்கும் இடையில் இணக்கப்பாடுகள் எட்டப்படவிலலை. இதனால் இருதரப்பினரும் தனித்தனியாக போட்டியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனநாய தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தமது விட்டுக்கொடுப்புக்களை தமிழ் அரசுக்கட்சி புரிந்து கொண்டு இணக்கப்பாடு எட்டிய விடயத்தினை அமுலாக்குவதற்கு தயாரில்லாத காரணத்தினால் தாம் ஏனைய கட்சிகளையும் இணைத்து தனியாக அம்பாறையில் களமிறங்கும் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ் அரசுக்கட்சியின் விட்டுக்கொடுக்காத நிலைமையால் அம்பாறை மாவட்டத்தில் பிரதிநிதித்துவ இழப்பு ஏற்பட்டால் அதற்கான முழுப்பொறுப்பையும் அக்கட்சியே கூற வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளர்.