பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கினால்  புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்வார்கள் :செல்வம் எம்.பி

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கினால்  புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்வார்கள்  என பாராளுமன்ற  உறுப்பினர் செல்வம்  அடைக்கலநாதன்  தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில்   நடைபெற்ற மத்திய ஆண்டு நிதிநிலை அறிக்கை  தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர்  மேலும் உரையாற்றியதாவது,

பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் . அப்போதுதான் வெளிநாட்டிலுள்ள இலங்கை    தமிழர்கள்  இங்கு முதலீடு செய்வார்கள்.

கடந்த காலங்களில்  முதலீடுகளை செய்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தை  பயன்படுத்தும் சூழலே காணப்படுகிறது.

ஆகவே பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளை அரசாங்கம்  மேற்கொள்ள வேண்டும்.

மன்னார் அபிவிருத்திக்  குழுக்  கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் வவுனியா பல்கலைக்கழக வளாகத்தினை மன்னாரில்  அமைக்க  அனுமதி   வழங்கப்பட்டது.

இது தொடர்பில் ஏற்கனவே இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. எனவே இந்த வளாகத்தினை அமைக்க  வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

முப்படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள   மக்களின் நிலங்களை விடுவிப்பதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார்.

வன்னியில்தான் கூடுதலான மக்களின் நிலங்கள் முப்படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவற்றை உடனடியாக விடுவிக்க வேண்டும். இதுதொடர்பில் அபிவிருத்திக்குக்குள்க் கூட்டத்தில் பேசியுள்ளோம்.

மன்னாரை எடுத்துக்கொண்டால் முள்ளிக்குளம், தலைமன்னார் பியர், மன்னார் போன்ற இடங்களை உதாரணமாக கூற முடியும்.

கிழக்கில் வாழைச்சேனையில் மக்களின் விவசாய   காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன  . இதனை பாராட்டுகின்றேன்

வன  வளத் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் போன்றவையே மக்களின் காணிகளில் ஆதிக்கம்  செலுத்துகின்றன.

இவர்களினால் தொடர்ந்தும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன . இந்தியாவிலுள்ள ஈழத்தமிழர்கள் இலங்கை திரும்ப விரும்பும் நிலையில் அவர்கள் கடவுச்சீட்டுக்களை பெறுவதில் சிக்கல் உள்ளது. எனவே அவர்களை கப்பலில்  அழைத்து வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.