பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான பல முக்கிய கரிசனைகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் இன்னும் பதிலளிக்காமை ஏமாற்றத்தை அளிப்பதாக இலங்கை தமிழரசுக்கட்சி தெரிவித்துள்ளது.
ஜெனீவாவில் கடந்த 8ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் வெளியிட்ட அறிக்கைக்கு, பதிலளிக்கும் வகையில் அறிக்கையொன்றை வெளியிட்டு அந்த கட்சி இதனைத் தெரிவித்துள்ளது.
‘தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்தல் நாட்டின் அபிவிருத்திக்கு அவசியம் என வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ள போதிலும் எளிதில் செய்யக்கூடிய முயற்சிகள் கூட இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை’ என்று தமிழரசுக்கட்சி தெரிவித்துள்ளது.
அத்துடன், புதிய அரசாங்கம் ஒரு வருடத்திற்கும் மேலாக ஆட்சியில் இருந்தும், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளது. பல உறுதிமொழிகள் வழங்கப்பட்ட போதிலும், பயங்கரவாதத் தடை சட்டம் இன்னும் நீக்கப்படவில்லை.
அதற்கு மாற்றாக எந்த புதிய சட்டமும் கொண்டு வரமாட்டோம் என்ற உறுதியான நிலைப்பாட்டை அரசாங்கம் எடுத்திருந்த போதிலும், தற்போது அமைச்சர் புதிய பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளார் என்று இலங்கை தமிழரசு கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படும் வரை அதன் பயன்பாட்டில் தற்காலிகமான தடை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும், உறுதிமொழிகளும் இருந்தும், அது தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதேபோன்று, நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை நீக்குவதற்கு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
வெளிநாட்டு நடவடிக்கைகள் தேசிய செயல்முறைகளில் பிளவுகளையும் அபாயத்தையும் ஏற்படுத்தும் என அமைச்சர் கூறியுள்ளதும், இலங்கை பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதும் மிகவும் கண்டனத்துக்குரியது.
ஆயுதப் போராட்டம் முடிவடைந்து பதினாறு ஆண்டுகள் ஆன போதும் எந்த உள்ளக பொறுப்புக்கூறல் பொறிமுறைகளும் இன்னமும் உருவாக்கப்படவில்லை. இந்த சூழலில், பாதிக்கப்பட்டவர்கள் சர்வதேச ஈடுபாட்டை நாடுவதைத் தவிர வேறுவழியில்லை என்றும் இலங்கை தமிழரசு கட்சி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் 240 என்புக்கூடுகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவை சட்டத்துக்கு புறம்பான கொலைகளாக உள்ளதுடன் இங்கு கிடைக்கப்பெற்ற சான்றுகள் தொடர்பாக அமைச்சர் எதுவும் குறிப்பிடவில்லை.
இந்த உயிரிழப்புகளை அடையாளம் காண உள்ளூர் நிபுணத்துவம் இல்லாதது நிதர்சனமான உண்மை.
இருந்தும், அரசாங்கம் சர்வதேச உதவியை இன்னமும் கோரவில்லை. மனிதப் புதைகுழிகள், வலிந்து காணாமலாக்கப்படுதல் போன்ற பல விடயங்களிலும் இதே நிலை தொடர்கிறது.
அதிகாரப் பகிர்வு குறித்து மீண்டும் வலியுறுத்தியதற்கும், தமிழ் சமூகத்தின் அவாவான சமத்துவம், நீதி, மாண்பு, சமாதானம் ஆகியவற்றுக்காக ஆதரவு வழங்கியதற்கும் இலங்கை தமிழரசுக்கட்சி இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கிறது என்றும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.