கடன் மறுசீரமைப்புத் தொடர்பில் தீர்க்கமான தீர்மானத்தை எடுங்கள் – IMF இலங்கைக்கு அறிவிப்பு

262 Views

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்துக்குள் தீர்க்கமான தீர்மானத்தை எடுக்குமாறு சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தியுள்ளது.

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா,சீனா மற்றும் ஜப்பான் ஆகிய முதனிலை கடன் வழங்குநர்கள் இலங்கைக்கு சாதகமான பதிலை வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

நேற்று பாராளுமன்றத்தில்  அண்மையில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாடு தொடர்பில் விசேட உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அமெரிக்காவில் கடந்த வாரம் நடைப்பெற்ற சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின்  வருடாந்த மாநாட்டில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்நலால் வீரசிங்க, நிதியமைச்சர் செயலாளர் உட்பட இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினராக கலந்து கொண்டோம்.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் 2019ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் பொருளாதார ரீதியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

பொருளாதார பாதிப்பு, காலநிலை மாற்றம், நிலைபேறான கடன், அடிப்படை நிவாரணம் வழங்கல் உள்ளிட்ட  அத்தியாவசிய விடயங்கள் குறித்து இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்பட்டு ஆராயப்பட்டது.

பூகோள மற்றும் வலய பொருளாதார பாதிப்பு மற்றும் அவற்றுக்கான தீர்வு திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

பணவீக்கம்,உணவு பணவீக்கம் உயர்வினால் நடுத்தர பொருளாதார நாடுகள் எதிர்கொண்டுள்ள சவால்கள் தொடர்பில் இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

மாநாட்டில் கலந்து கொண்ட உலக நாடுகளின் மத்திய வங்கிகளின் ஆளுநர்கள், நிதியமைச்சர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் தங்களின் எதிர்கால திட்டங்களை முன்வைத்தார்கள்.

உணவு மற்றும் பண வீக்கத்தினால் நடுத்தர நாடுகள் எதிர்வரும் காலங்களில் மனிதாபிமான உதவி கோரும் நிலைக்கு தள்ளப்படும் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

பணவீக்கம் 2023ஆம் ஆண்டு 6.5 சதவீதத்தாலும்,2024ஆம் ஆண்டு 4.1 சதவீதத்தாலும் குறைவடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கை குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடனும், உலக வங்கியின் பிரதிநிதிகளுடனும் விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டோம்.

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக சர்வதேச நாணய நிதியத்தினதும், உலக வங்கியின் பிரதிநிதிகளும் உறுதியளித்துள்ளார்கள். கடன் மறுசீரமைப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தகப்பட்டுள்ளது.

இவ்வருடத்தின் இறுதி காலப்பகுதிக்குள் நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்று கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.

எதிர்வரும் மாதத்தின் முதல் வாரத்துக்குள் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தீர்க்கமான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என நாணய நிதியம் அறிவுறுத்தியுள்ளது.

இலங்கையின் பிரதான கடன் வழங்குநர்களான சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நாடுகள் சாதகமான பதிலை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கியின் வருடாந்த மாநாட்டில் இலங்கை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தொடர்பில் விவாதத்துக்கும் தயார் என்றார்.

Leave a Reply