இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் சகல தமிழ்த்தரப்புக்களையும் ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவிருந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.
இலங்கை – சுவிட்ஸர்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்துடன் கூட்டிணைந்து சுவிட்ஸர்லாந்து அரசாங்கத்தின் ஏற்பாட்டில் அந்நாட்டின் கூட்டாட்சி அரசியல் முறைமை மற்றும் தேசிய ஒருமைப்பாடு வலுவாக்கம் என்பன பற்றி இலங்கையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்குத் தெளிவூட்டும் வகையிலான செயலமர்வொன்று நடத்தப்பட்டது.
அதில் பங்கேற்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமசந்திரன் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் சிறி வோல்ற் (Siri Walt) அது குறித்து இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனையும் சந்தித்து உரையாடியிருந்தார்.
இதன்போது தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தைப் பொறுத்தமட்டில் சகல தமிழ்த்தேசியக் கட்சிகளும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வரவேண்டியது அவசியம் என்ற விடயம் தமிழ்ப்பிரதிநிதிகளால் தூதுவர் சிறி வோல்ற்றிடம் எடுத்துரைக்கப்பட்டது.
இவ்வாறானதொரு பின்னணியில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஒருங்கிணைப்பில் ஒரு கூட்டு சந்திப்பை நடாத்துவதற்கு தமிழ்த்தேசியக் கட்சிகள் உடன்பட்டதை அடுத்து, அதனை எதிர்வரும் 19 ஆம் திகதி கொழும்பில் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
எவ்வாறாயினும் அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட உள்ள புதிய அரசியலமைப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தமிழ் தேசியக் கட்சிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் 15ஆம் திகதி இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்துள்ள கலந்துரையாடல் இடம்பெறுமாயின் சுவிட்ஸர்லாந்து தலைமையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தேவை இருக்காது என்று இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். எனவே எதிர்வரும் 15ஆம் திகதிக்கு பின்னர் சுவிட்ஸர்லாந்து தூதுவர் தலைமையிலான சந்திப்பு குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.



