இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவர் பதவியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நீக்கப்பட்டமை கட்சியின் உட்கட்சி விவகாரமாகும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பதவி நீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கிளிநொச்சி மாவட்ட மக்கள் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்திலுள்ள தமிழரசுக் கட்சித் தலைமையகத்தில் சுமந்திரனைச் சந்தித்து மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.
அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“கிளிநொச்சியிலிருந்து வந்த பிரதிநிதிகளுடன் நீண்ட நேரம் கலந்துரையாடினேன். அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய விளக்கங்களை அளித்துள்ளேன். சிறிதரன் விவகாரம் என்பது ஓராண்டு காலமாக நீடித்து வரும் ஒரு விடயமாகும்.
கட்சி அவருக்குப் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆலோசனைகளை வழங்கியிருந்தது. இறுதியாக வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களையும் அவர் பின்பற்றாத காரணத்தினாலேயே, அவரை நியமித்த அரசியல் குழு தற்போது அவரை அந்தப் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது” என்று எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள தற்காலிக ஏற்பாட்டின் படி, பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அந்தப் பதவியைப் பொறுப்பேற்பார்.
உண்மையில் அந்தப் பதவிக்குரிய பணிகளை இதுவரையில் அவரே முன்னெடுத்து வந்தார். இது ஏற்கனவே அரசியல் குழுவால் எடுக்கப்பட்ட தீர்மானமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து கிளிநொச்சியிலிருந்து பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இதனை முழுமையாகப் பகிரங்க வெளியில் சொல்வதற்கு இது தருணமல்ல என்றும் தேவை ஏற்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் உண்மைகளை வெளிப்படுத்துவோம் என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.



