நேற்று (09) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதன்படி, டீசல், பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை வெவ்வேறு வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, நாட்டில் எரிபொருள் கையிருப்பு இருப்பதாக அரசாங்கம் தெரிவித்திருந்த போதிலும், திடீரென எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய அவசியம் குறித்து, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெளிவுபடுத்தினார்.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 37.76 வீதம் அதிகரித்துள்ளது. இதனுடன் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களின் விலையும் பெருமளவு உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களில் நாட்டில் எரிபொருள் நுகர்வு வழமைக்கு மாறாக அதிகரித்துள்ளது.
பொதுவாக ஒரு நாளைக்கு சுமார் 4,000 மெற்றிக் தொன் டீசல் நுகரப்படும் நிலையில், கடந்த மார்ச் 1 முதல் 9 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மட்டும் மேலதிகமாக 23,000 மெற்றிக் தொன் டீசலும், 13,000 மெற்றிக் தொன் பெற்றோலும் நுகரப்பட்டுள்ளது.
இந்த திடீர் நுகர்வு அதிகரிப்பு காரணமாக, நாட்டில் இருந்த எரிபொருள் கையிருப்பு முற்றிலும் தீர்ந்துவிட்டது. இதனால், புதிய விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் கப்பல்களின் செலவை ஈடுகட்ட இந்த விலை அதிகரிப்பு தவிர்க்க முடியாததானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“சர்வதேச சந்தையில் விலை உயரும் போது, உள்நாட்டு விலையை அதிகரிக்காவிட்டால், தனியார் நிறுவனங்கள் எரிபொருள் இறக்குமதியைக் குறைத்துக்கொள்ள அல்லது நிறுத்தக்கூடும். இது நாட்டின் எரிபொருள் விநியோகத்தில் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும்,” என்றும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.
பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப பாரிய விலை அதிகரிப்பைச் செய்யாமல், கட்டுப்படுத்தப்பட்ட அளவில் மட்டுமே இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.



