உத்தியோகபூர்வ கடன்வழங்குனர் குழு மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான கொள்கை இணக்கப்பாட்டு நிபந்தனைகள் குறித்த பேச்சுவார்த்தை செயன்முறை வெற்றிகரமாக முடிவுக்குக்கொண்டுவரப்பட்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடன்மறுசீரமைப்பு செயன்முறையின்போது ஆரம்பகட்டமாக எட்டப்படும் கொள்கை இணக்கப்பாடு தொடர்பான நிபந்தனைகள் அனைத்துக் கடன்வழங்குனர்களும் ஒரேவிதமாக நடத்தப்படல் என்ற கோட்பாட்டுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கின்றனவா என்பது குறித்து உத்தியோகபூர்வ கடன்வழங்குனர் குழுவுடனும், சர்வதேச நாணய நிதியத்துடனும் முன்னெடுக்கப்பட்டுவந்த பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்டிருப்பதாக நிதியமைச்சினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்டிருக்கும் கொள்கை இணக்கப்பாட்டு நிபந்தனைகள் அனைத்துக் கடன்வழங்குனர்களும் ஒரேவிதமாக நடத்தப்படல் என் கோட்பாட்டுக்கு ஏற்புடையவையாகக் காணப்படுவதாக உத்தியோகபூர்வ கடன்வழங்குனர் குழு உறுதிப்படுத்தியிருப்பதாகவும், அதேவேளை அந்நிபந்தனைகள் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின் மட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருப்பதாக சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளும் உறுதிப்படுத்தியிருப்பதாகவும் நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச பிணைமுறி உரித்தாளர்களுடன் கொள்கை மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதாகக் கடந்த செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதி அரசாங்கம் அறிவித்தது. அதனையடுத்து கடந்த மாதம் 21 ஆம் திகதி ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் நடைபெற்று, 25 ஆம் புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்டது.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே தற்போது உத்தியோகபூர்வ கடன்வழங்குனர் குழுவுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவுக்குக்கொண்டுவரப்பட்டிருப்பதுடன், இச்செயன்முறையைப் பூர்த்திசெய்வதற்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய சர்வதேச நாணய நிதியம் மற்றும் உத்தியோகபூர்வ கடன்வழங்குனர் குழு உள்ளடங்கலாக சகல கடன்வழங்குனர்களுக்கும் அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது.



