இலங்கையில் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினரால், முல்லைத்தீவின் தமிழ் ஊடகவியலாளர் கணபதிபிள்ளை குமணன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பாதுகாவலர்களுக்கான சிறப்பு அறிக்கையாளர் மேரி லோலர் (Mary Lawlor) அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
தமது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் அவர் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார். சட்டத்துக்கு உட்பட்ட ஊடகவியல், சர்வதேச ஈடுபாடு மற்றும் மனித உரிமை பாதுகாப்பு உள்ளிட்டவற்றை இலக்கு வைத்து இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் கணபதிபிள்ளை குமணன் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினரால் சுமார் 6 மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த செயற்பாட்டுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் குழுக்களும், ஊடக உரிமைகள் குழுக்களும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன. இந்தநிலையில் குறித்த செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இன்றைய தினம் (22) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.