திருமலையில் படையினர் வசமுள்ள காணிகளை சுற்றுலாவுக்கு விடுவிக்க நடவடிக்கை

திருகோணமலை மாவட்டத்தில் பாதுகாப்புப் படைகளின் வசமுள்ள சுற்றுலாவுக்கு பொருத்தமான காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்று சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க இன்று (7) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

திருகோணமலை பகுதியிலுள்ள மார்பள் கடற்கரை மற்றும் ஸ்வீட் குடா ஆகிய பகுதிகளை மையப்படுத்திய அரசாங்கத்தின் சுற்றுலா திட்டங்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

“யுத்த காலத்தில் பல காணிகள் முப்படை வசமிருந்த நிலையில், அவை படிபடியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை சுவீகரித்துள்ள ஸ்வீட் குடா காணி தொடர்பில் வழக்கு உள்ளது. அது தீர்க்கப்பட்டவுடன் விருப்ப கோரல்கள் அழைக்கப்பட்டு, காணிகள் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், குறித்த சூழலுக்கு பொருத்தமான நிலையான அபிருத்திக்கு ஏற்றவகையிலான திட்டங்களுக்காகவும் அந்த காணிகளை விடுவிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
முப்படையினர் வசம் பல காணிகள் உள்ளன.

அவற்றில் விசேடமாக சுற்றுலா திட்டங்களுக்கு வழங்கப்படக்கூடிய காணிகளை உரிய அமைச்சுடன் கலந்துரையாடி விடுவிப்பதற்கும், அவற்றை பொருத்தமான முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்குமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்தார்.