டித்வா புயலால் பாதிக்கப்பட்ட அநுராதபுரம், பொலன்னறுவை மக்களுக்கு காணி வழங்கி வீடுகட்டுவதற்கு 50 இலட்சம் ரூபா வழங்க முடியும் என்றால், ஏன் மலையக மக்களுக்கு அதனை வழங்க முடியாது என ஜனாதிபதியிடம் கேட்கிறேன். அதனால் வாயால் வடை சுடாமல் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்ற பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
தித்வா புயல் அனர்த்தத்தின் பின்னர் மலையகத்தில் இருந்து சோகமான அவலக்குரல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நிவாரண பட்டியலை ஜனாதிபதி இந்த சபையில் அறிவித்திருந்தார். வீட்டை சுத்தப்படுத்த 25ஆயிரம் ரூபா, பாடசாலை மாணவர்களுக்கு மொத்தமாக 25ஆயிரம் ரூபா வழங்குவதாக குறிப்பிட்டிருந்தார். அதேபோன்று பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு நிவாரணம் வழங்குவதாக தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை மலையக பிரதேசங்களுக்கு 30, 40 வீதமான நிவாரணமே வழங்கப்பட்டிருக்கிறது.
அதனால் மலையகத்தில் கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, கேகாலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் யாருக்காவது இந்த நிவாரணம் கிடைக்கப்பெறாதவர்கள் யாராவது இருந்தால், அவர்கள் மனோகணேசன், இலங்கை பாராளுமன்றம் என்ற முனவரிக்கு தமிழில் எழுதி கடிதம் ஒன்றை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அடுத்ததாக மலையக மக்களுக்கு தேவையான விடயம்தான் காணியும் வீடும். அனர்த்தத்தில் காணிகள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு காணி அல்லது 50 இலட்சம் ரூபா வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அதேபோன்று அந்த காணிகளில் வீடு கட்டுவதற்கு மேலும 50இலட்சம் ரூபா வழங்குவதாக தெரிவித்திருந்தார். அதேநேரம் ஜனாதிபதி ரீ பிள்டிங் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை அநுராதபுரத்தில் ஆரம்பித்து, அங்கு வீடுகளை நிர்மாணிப்பதற்கு 50 இலட்சம் ரூபா வழங்கி இருக்கிறார். அப்படியானால் ஏன் அந்த 50 இலட்சம் ரூபாவை மலையகத்தில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வழங்க முடியாது என கேட்கிறோம்.
மலையகத்தில் காணி இல்லை என தெரிவிக்க முடியாது. தோட்டக்காணிகள் அனைத்தும் அரசுக்கு சொந்தமானதாகும். நீண்டகால குத்தகைக்கே தனியார் கம்பனிகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. அதனால் அநுராதபுரம், பொலன்னறுவையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணி வழங்கி வீடுகட்டுவதற்கு 50 இலட்சம் ரூபா வழங்க முடியும் என்றால், ஏன் மலையக மக்களுக்கு அதனை வழங்க முடியாது என ஜனாதிபதியிடம் கேட்கிறேன். அதனால்தான் இன ஒடுக்கம், பாரபட்சம் என தெரிவிக்கிறோம்.
மலையகத்தில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்ந்துவந்தார்கள். அவர்களுக்கு இன்று காணியும் இல்லை வீடும் இல்லாமல் அனாதரவான நிலையில் இருக்கிறார்கள். அவர்களை பிரதேச செயலாளர்கள், கிராமசேகர்கள், கட்டிட ஆராய்ச்சி அதிகாரிகள் முகாம்களில் இருந்து விரட்டி, தோட்டங்களில் இருக்கும் குடியிறருப்புகளில் இருக்குமாறு தெரிவிக்கிறார்கள். ஆனால் அவர்களின் குடியிருப்புகள் பாதுகாப்பற்ற நிலையிலே இருக்கின்றன. அவ்வாறு இருக்கும்போது அவர்கள் எவ்வாறு அங்கு சென்று வாழடியும் என கேட்கிறோம். அதனால் மலையகத்துக்கு விசேட பொறுமுறை ஒன்றை அமைத்து, அவர்களுக்கு காணி கொடுத்தே ஆகவேண்டும். காணி உரிமையே அவர்களின் முதலாவது தேவையாகும்.



