மாற்றாந்தாய் மனப்பான்மை- துரைசாமி நடராஜா

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சமகாலத்தில் பல்வேறு நெருக்கீடுகளுக்கும் முகம் கொடுத்து வருவது தெரிந்த விடயமாகும். இதனால்  இவர்களின் வாழ்க்கை நிலைமைகள் கீழ்நிலை அடைந்துள்ள நிலையில் அரசாங்கமும் இவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே  வழிநடத்துவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே  “மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு ஏறி மிதித்தாற்போல “ தொழிலாளர்களை மேலும் நெருக்கீடுகளுக்கு உள்ளாக்குவதாக கம்பனியினரின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.தொழிலாளர்களின் தொழில் உரிமைகள் பலவும் கம்பனியினரால் மீறப்படும் நிலையில் இது தொழிலாளர்களிடையே விரக்தி நிலையை ஏற்படுத்தியுள்ளது .அத்தோடு பெருந்தோட்டத் தொழிற்றுறையின் வீழ்ச்சிக்கும் அது வழிசமைத்துள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் இருந்தும் இங்கு அழைத்து வரப்பட்ட நிலையில் அவர்கள் அரசியல், பொருளாதார, சமூக ரீதியாக அடக்கி ஒடுக்கப்பட்ட வரலாறுகள் மிகவும் கசப்பானவையாகும். இதனால் ஏற்பட்ட தழும்புகள் அவ்வளவு விரைவில் மாறுவதாக இல்லை. தமிழகத்தில் இருந்தும் அழைத்து வரப்பட்டு மலையக பகுதிகளில் குடியேற்றப்பட்ட்ட இம்மக்களின வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை தோட்டங்கள் கட்டுப்படுத்துவதாக புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இம்மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகள் அனைத்தையுமே வழங்குவதால் தோட்ட மக்கள் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு முற்றுமுழுதாக தோட்ட முகாமையிலேயே தங்கியிருக்கும் நிலை காணப்படுகின்றது.

வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் தோட்ட எல்லைக்குள்ளேயே தனியொரு  அமைப்பின் கிீழ் வழங்கப்படுவதால் இவை சுயதேவைகளை பூர்த்தி செய்யும் அலகுகளாக விளங்குகின்றன. இதன் காரணமாக அவற்றை பூரணத்துவ தன்மை கொண்ட அமைப்புக்களென கருதுவது பொருத்தமானதே என்பதும் அவர்களின் கருத்தாகவுள்ளது.

இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு அடுத்த வருடத்துடன்  200 ஆண்டுகளாகும் நிலையில் இவர்கள் இன்னும் கூட தேவைகள் நிறைவுசெய்யப்படாது உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கின்றமை வருந்தத்தக்கதேயாகும்.உலகின் பின்தங்கிய சமூகங்கள் பலவும் இன்று முன்னேறி  ” உலகமயமாக்கல் ” நிலைமைக்கு வலுசேர்த்துக் கொண்டிருக்கும் நிலையில் மலையக பெருந்தோட்ட சமூகத்தினர் அடிப்படை தேவைகளுக்காக போராடிக் கொண்டிருப்பது ஒரு சாபக்கேடா! என்றே எண்ணத்தோன்றுகின்றது.

இதிலிருந்தும் விடுபட்டு அவர்கள் மேலெழும்ப வேண்டிய தேவை காணப்படுகின்றபோதும் நிலைமைகள் அவர்களுக்கு சாதகமானதாக இல்லை என்பதும் கண்கூடாகும். காலனித்துவ ஆட்சியில் இருந்து வெளியேறி பல ஆண்டுகள் கடந்துள்ளபோதும் இப்போது நவகாலனித்துவத்தில் இலங்கை மக்கள் சிறைபட்டுக் கிடக்கின்றார்கள்.இத்தகைய நவ காலனித்துவத்தால் அதிகமான சவால்களுக்கு பெருந்தோட்ட மக்களே முகம் கொடுத்து வருகின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை.

கட்டளைச் சட்டங்கள்

இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட தொழிலாளர்களை அடிமைப்படுத்தி அவர்களின் நலன்களை புறந்தள்ளும் நோக்கில் ஆட்சியாளர்கள் பல்வேறு கட்டளைச் சட்டங்களையும் அறிமுகம் செய்திருந்தனர்.இந்த கட்டளைச் சட்டங்கள் இந்நாட்டின் தொழில் சட்ட வரலாற்றில் முதன்முதலாக வந்த கட்டளைச் சட்டங்களாக கருதப்படுகின்றன.

1841 ம் ஆண்டு 5 ஆம் இலக்கம் கொண்ட” கூலி மற்றும் சேவைகள் ஒப்பந்த கட்டளைச் சட்டம் ” முதலாவது கட்டளைச் சட்டமாகும்.இச்சட்டத்தின் கீழ், “கங்காணிமார்கள்” என்று அறிமுகப்படுத்தப்பட்ட தோட்டத் தொழிலாளர்களை வழங்கும் முகவர்கள் மூலமாக வெள்ளை இன தோட்ட உரிமையாளர்களுக்கு அல்லது துரைமார்களுக்கு இந்தியாவிலிருந்து தொழிலாளர்களை கொண்டு வர முடிந்தது.

1941 ம் ஆண்டின் 27 ம் இலக்க சம்பளச் சபையின் கட்டளைச் சட்டம், கைத்தொழில்களைச் சார்ந்த வேலையில் ஈடுபடும் ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டது.அதிக வசதியுடனும், விரைவாகவும் கைத்தொழில் பிணக்குகளை விசாரித்துப் பார்த்தல், தவிர்த்தல் மற்றும் தீர்த்து வைக்கும் நோக்கத்துடன் 1950 ம் ஆண்டின் 43 ம் இலக்க கைத்தொழில் பிணக்குச் சட்டம் முன்வைக்கப்பட்டது.1958 இன் 15 ம் இலக்க ஊழியர் சேமலாப நிதியச் சட்டம், 1980 இன் 46 ம் இலக்க ஊழியர் நம்பிக்கை நிதியச் சட்டம் என்பனவும் முக்கியத்துவம் மிக்கனவாக விளங்குகின்றன.

தொழில் தருநர், தொழில் புரிவோர் ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே கூட்டுறவினால் தொழில் புரிவோருடைய எதிர்கால அபிவிருத்தியின் பொருட்டு ஏற்படுத்தப்பட்டுள்ள நிதியமாக ஊழியர் சேமலாப நிதியம் விளங்குகின்றது.ஊழியர் சேமலாப நிதியக் கொடுப்பனவு முழுமையாக தொழில் தருநரின் பொறுப்பாக இருந்தபோதிலும் அது சரியாக செய்யப்படாவிட்டால் அதுகுறித்து தொழில் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வூட்டுதல் ஊழியரின் பொறுப்பாகும் என்று தெளிவுபடுத்துப்பட்டுள்ளது. இதேவேளை ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்து நன்மைகளைப் பெற்றுக் கொள்ளும் நடைமுறைகளுக்கு மேலாக, ஊழியர் நம்பிக்கை நிதியத்தில்.இருந்து நன்மைகளை மிகவும் கூடிய சீக்கிரத்தில் பெற்றுக் கொள்ளும் நடைமுறை காணப்படுகின்றமையும் நோக்கத்தக்கதாகும்.

தொழிலாளர்களின் நலனோம்புகை மற்றும் தொழில் உரிமைகள் என்பவற்றைப் பேணும் மேலும் பல சட்டங்களும் நடைமுறையில் உள்ளன.எனினும் இச்சட்டங்களின் நடைமுறைப் பயன்பாடுகள் குறைவாகவே காணப்படுகின்றன.தோட்டத் தொழிற்றுறையில் கம்பனியின்ரின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில் அவர்கள் தான் தோன்றித்தனமாக செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.கூட்டு ஒப்பந்த சரத்துக்கள் பலவும் மீறப்பட்டு தமக்கு அநீதி இழைக்கப்படுவதாக ஏற்கனவே தொழிலாளர்கள் போர்க்கொடி உயர்த்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இலாபத்தைக் மட்டுமே நோக்கமாகக் கொண்ட கம்பனியினர் தொழிலாளர்களின் நலன்களை கிஞ்சித்தும் எண்ணிப் பார்ப்பதாக இல்லை.தொழிற்றுறையின் அதிகரித்த கெடுபிடிகள் மற்றும் ஊதியப் பற்றாக்குறை என்பவற்றால் பல தொழிலாளர்கள் மாற்றுத் தொழில்களை நாடி இடம்பெயர்வதாகவும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொழிலாளர்களின் இருப்பையும் அடையாளத்தையும் கேள்விக்குறியாக்கும் ஒரு நடவடிக்கையாகும் என்பது யாவரும் அறிந்தவொன்றேயாகும்.அத்தோடு பெருந்தோட்ட தேயிலைத் தொழிற்றுறையின் கரிசனையற்ற போக்கு மற்றும் முகாமைத்துவத்தின் அடாவடித்தனங்கள் என்பவற்றின் காரணமாக இளைஞர்கள் இத்தொழிற்றுறையில் ஈடுபட்டுழைக்க ஆர்வமின்றி காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

உரிமை  மீறல்கள்

மனிதக் குடும்பத்தினைச் சேர்ந்த சகலரினதும் உள்ளார்ந்த கௌரவத்தையும், அவர்கள் யாவரதும் சமமான, பாராதீனப்படுத்த முடியாத உரிமைகளையும் அங்கீகரித்தலே உலகத்தில் சுதந்திரம்,நீதி, சமாதானம் என்பவற்றுக்கு அடிப்படையாக உள்ளதென்று வலியுறுத்தப்பட்டுள்ளது.எனினும் பெருந்தோட்ட மக்களின் மனித உரிமைகள் எந்தளவுக்கு மதிக்கப்படுகின்றன? பெருந்தோட்டத் துறையினரின் தொழில் மகத்துவம் எந்தளவுக்கு பேணப்படுகின்றது? என்பது தொடர்பில் அதிருப்தியான வெளிப்பாடுகளே மேலோங்குகின்றன.

இதேவேளை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை கம்பெனிகள் மீறுவதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.இவ்வாறு அடிப்படை மனித உரிமைகளை மீறும் கம்பெனிகளுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.அத்தோடு அவர்களது நாட்சம்பளம் 3250 ரூபாவாக  அதிகரிக்கப்பட வேண்டும்.

தொழிலாளர்களை பாதுகாக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளபோதிலும் இதுவரையில் அது நடைமுறைபடுத்தப்படவில்லை.இதன் காரணமாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்பதனையும் அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் சமகால சூழ்நிலைகளால் தொழிலாளர்கள் விழிபிதுங்கியுள்ள நிலையில் கம்பனியினரின் அடாவடித்தனங்கள் தொழிலாளர்களை நிலைகுலையச் செய்துள்ளன.

சமகால சூழ்நிலையில் மலையக கட்சிகளின் அரசியல் அழுத்தங்கள், பேரம்பேசும் சக்தி, ஆளுமைகள் என்பன வலுவிழந்திருப்பதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.இதன் தாக்கத்தை அரசியலில் மட்டுமன்றி கம்பனியினரின் நடவடிக்கைகளிலும் அவதானிக்க முடிகின்றது.அரசியல் பலம்  வலுவிழந்துள்ளதை மையப்படுத்தி கம்பனிகளும் பெருந்தோட்ட மக்களை அடக்கியாள முற்படுகின்றன என்பதே உண்மையாகும்.

ஏட்டளவில் தொழிலாளர்களின் நலன்பேணும் சட்டங்கள் பல காணப்படுகின்றன.எத்தனை சட்டங்கள் இருந்தபோதும் அது நடைமுறையில் பயன்பாடற்று,ஏட்டுச் சுரைக்காயாக காணப்படுமானால் அதனால் எவ்விதமான பிரயோசனமும் இல்லை.இந்நிலையில் தொழிலாளர்களின் தொழிலுரிமையைப் பேணும் தொழிற்சட்டங்கள்  உள்ளிட்ட ஏனைய சட்டங்களை உரியவாறு அமுல்படுத்துவதன் மூலம் தொழிலாளர்களின் அபிவிருத்திக்கும் இருப்பிற்கும் வலுசேர்க்க முடியும் என்பதே உண்மையாகும்.