இலங்கையில் அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு!

இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள அவசரகால நிலையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த அதிவிசேட அறிவித்தல் வெளியாகியுள்ளதுடன், பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் பொது அமைதியைப் பேணுதல், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளை எவ்வித தடையுமின்றி வழங்குவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கடந்த ஆண்டு நாட்டைத் தாக்கிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து நாடு இன்னும் முழுமையாக மீளாத நிலையில், நிவாரணப் பணிகள் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுக்க இந்த அவசரகால. நிலைமை அவசியமென அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனுடன் தொடர்புடைய மற்றுமொரு வர்த்தமானி மூலம் மின்சாரம், எரிபொருள் விநியோகம், சுகாதாரம் மற்றும் பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட சேவைகள் தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

அதேவேளை, இந்த அவசரகால அதிகாரங்கள் எக்காரணம் கொண்டும் பொதுமக்களின் சிவில் உரிமைகளை மீறும் வகையில் பயன்படுத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி ஏற்கனவே நாட்டு மக்களுக்கு உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.